mla nehru
mla nehru pt desk
இந்தியா

புதுச்சேரி: தலைமைச் செயலாளர், சுயேட்சை எம்எல்ஏ இடையே மோதல் - முற்றுப்புள்ளி வைத்த சபாநாயகர் செல்வம்

webteam

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தாமல் உள்ளது. இதில், முறைகேடு நடந்து இருக்கிறது எனவே தலைமைச் செயலாளரை சந்தித்து மனு கொடுக்க வேண்டுமென சுயேட்சை எம்.எல்.ஏ நேரு அனுமதி கேட்டுள்ளார். இந்நிலையில், அனுமதி கிடைத்தும் தலைமைச் செயலகம் சென்ற சுயேட்சை எம்.எல்.ஏ நேருவை சந்திக்க தலைமைச் செயலாளர் மறுத்துவிட்டார்.

இதனால் ஆவேசமடைந்த நேரு, தலைமைச் செயலகத்தில் தர்ணா போராட்டம் செய்ததோடு தலைமைச் செயலாளர் பங்கேற்ற நிகழ்ச்சியில், போலீசாரின் தடுப்புகளை மீறி உள்ளே சென்று, மேடையில் இருந்த தலைமைச் செயலாளரை முதலமைச்சர் முன்னிலையில் கடுமையாக வசைபாடினார். இந்த சம்பவம் புதுச்சேரி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

governor tamilisai

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ நேரு, மீது இரண்டு காவல் நிலையங்களில் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் எம்.எல்.ஏக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சுயேட்சை எம்.எல்.ஏ ஆதரவளிக்கும் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் செல்வத்தை சந்தித்து முறையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் ராஜீவ் வர்மா மீது உரிமை மீறல் புகாரை எம்.எல்.ஏ நேரு சபாநாயகர் செல்வத்திடம் வழங்கினார். இதனை பெற்றுக் கொண்ட சபாநாயகர் செல்வம், செய்தியாளர்களை சந்தித்த போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு அரசு அதிகாரிகள் மதிப்பளிக்க வேண்டும். இந்த விவகாரம் ஏற்கனவே எழுந்ததால் அமைச்சரவை முடிவுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் மீது நவடிக்கை எடுக்க கடந்த பேரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. முதலமைச்சர் கேட்டுக் கொண்டதால் அது கைவிடப்பட்டது. நேரு எம்.எல்.ஏ மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை விசுவரூபம் எடுத்துள்ள நிலையில், நேற்று மாலை முதலமைச்சர் ரங்கசாமி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து 30 நிமிடங்கள் பேசினார். இதையடுத்து எம்.எல்.ஏ-விற்கும் தலைமைச் செயலாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர இருவரும் முடிவு செய்ததாக தகவல் வெளியானது.

cm rengasamy

இதனையடுத்து சபாநாயகர் செல்வம் தலைமையில் தலைமைச் செயலாளர், டிஜிபி, உள்துறை செயலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆலோசனை செய்தனர். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து வெளியான செய்தி குறிப்பில் எம்.எல்.ஏ நேரு மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீதான மோதல் விவகாரம் சமாதானம் செய்து வைக்கப்பட்டுள்ளது. நேரு எம்.எல்.ஏ மீது போடப்பட்டுள்ள வழக்கு வாபஸ் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் மீண்டும் ஒரு அதிகார மோதல் புதுச்சேரியில் எழாமல் தற்போதைக்கு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது மட்டுமல்லாமல், மத்திய பாஜக அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை தாங்கள் நியமிக்கும் அதிகாரிகளைக் கொண்டு நெருக்கடி கொடுக்கின்றது என்ற எதிர்க் கட்சியினருக்கு வாயில் அவில்போட்டு அசைபோட வாய்ப்பாக இந்த சம்பவம் அமைந்து விட்டது.

speaker selvam

இதனிடையே இந்த விவகாரத்தில் தனது பணியை சரிவர செய்யவிலலை எனக்கூறி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட ஒதியஞ்சாலை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணனை மீண்டும் அதே பணியில் நியமிக்கவும் காவல்துறை தலைமையகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.