Abhijit Dipke ANI
இந்தியா

'இனி ஒரு வருசத்துக்கு..’ உறுதிமொழி அடிப்படையில் CJP தலைவர்கள் விடுதலை!

24 மணி நேர தடுப்புக் காவலுக்குப் பின் அபிஜித் தீப்கே உட்பட கரப்பான் ஜனதா கட்சி தலைவர்கள் நிபந்தனைகளோடு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

PT WEB

டெல்லி காவல்துறையால் முன்னெச்சரிக்கை தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட கரப்பான் ஜனதா கட்சி தலைவர்கள் மூவரும், ஒரு வருட நிபந்தனையுடன் ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என உறுதிமொழி பத்திரம் பெறப்பட்டு விடுதலை செய்யப்பட்டது.

டெல்லி காவல்துறையினரால் முன்னெச்சரிக்கை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கரப்பான் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே மற்றும் முக்கிய தலைவர்களான அசுதோஷ் ரங்கா, சௌரவ் தாஸ் ஆகிய மூன்று பேரும் சுமார் 24 மணி நேரத்திற்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை காலை விடுவிக்கப்பட்டனர். டெல்லி கேன்டோன்மென்ட் காவல் நிலையத்தின் சிறப்பு நிர்வாக மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இவர்கள் மூன்று பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அடுத்த ஒரு வருட காலத்திற்கு அமைதியை பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கை அல்லது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளிலோ ஈடுபடக் கூடாது என்ற உறுமொழிப் பத்திரத்தின் அடிப்படையிலேயே சிறப்பு நிர்வாக மேஜிஸ்ட்ரேட் கரப்பான் கட்சி தலைவர்களை விடுவித்துள்ளார்.

Delhi CJP Protest

சனிக்கிழமை காலை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே, முன்னெச்சரிக்கை தடுப்புக் காவல் சட்டப் பிரிவுகளின் கீழ் திப்கே, தாஸ் மற்றும் ரங்கா ஆகியோரை டெல்லி காவல்துறையினர் தடுப்பு காவலில் அழைத்து சென்றனர்.

டெல்லி கன்டோன்மென்ட் காவல் நிலைய நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டதை கரப்பான் கட்சி சட்டப் பிரிவுத் தலைவர் ரத்னா சிங் உறுதிப்படுத்தினார். அங்கு அவர்களின் வழக்கறிஞர்கள் ஆஜராகி, உரிய நிபந்தனைகளுடன் அவர்களை விடுவிப்பதற்கான உத்தரவைப் பெற்றனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை 10.15 மணியளவில், காவல் நிலைய வளாகத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டிருந்த சூழலில், மூவரும் ஒரு காரில் வெளியே வந்தனர். இவர்கள் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மூவரும் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “அபிஜித் திப்கே, அசுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோர் மீது பிஎன்எஸ்எஸ் (BNSS) பிரிவு 126/170-ன் கீழ் அக்டோபர் 10 அன்று முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சட்டப்பூர்வ நடைமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டு, அக்டோபர் 11 அன்று டெல்லி கேன்டோன்மென்ட் சிறப்பு நிர்வாக மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்,” என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Abhijit Dipke

“அடுத்த ஒரு ஆண்டிற்கு அமைதியையும் நன்னடத்தையும் பேணுவதற்காக ரூ.50,000 பிணைத் தொகைக்கான பிணைப் பத்திரம் பெறப்பட்டு, மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்” என அவர்கள் குறிப்பிட்டனர்.

விடுதலையானதைத் தொடர்ந்து அபிஜித் திப்கே உடனடியாகத் தனது சொந்த ஊருக்குப் புறப்படுகிறார். அவர் கைது செய்யப்பட்டதன் காரணமாக, அவரது குடும்பத்தினர் அவரது பாட்டியின் இறுதிச் சடங்குகளை நிறுத்தி வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.