உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கு ஒன்றின் விசாரணையின்போது கூறிய கருத்துகளின் பின்னணியில், அமெரிக்காவில் படித்து வரும் அபிஜித் தீப்கே என்பவரால் இன்ஸ்டா பக்கத்தில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’என்ற பக்கம் தொடங்கப்பட்டது. அதில் வேடிக்கையான பதிவுகள் பதிவிடப்பட்ட நிலையில், பலரும் அதனைப் பின்தொடரத் தொடங்கினர். இந்தசூழலில் தான், நீட் வினாத்தாள் கசிவு, போட்டித் தேர்வுகள் மற்றும் சிபிஎஸ்இ தேர்வு விவகாரம் போன்ற கல்வித்துறையில் நிகழ்ந்திருக்கும் முக்கிய பிரச்னைகளை சுட்டிக்காட்டியதுடம் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மாநிலம் தோறும் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், ஒரு இயக்கமாக மாறியிருக்கிறது.
அக்கட்சியின் முதல் போராட்டம் ஜூன் 6-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசியிருந்த அவர், மத்தியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் எனத் தெரிவித்திருந்தார். இந்தசூழலில் தான், புணே, லக்னோ, அமிர்சரஸ், பெங்களூரு ஆகிய நகரங்களில் அக்கட்சியின் போராட்டம் நடைபெற்றது.
அந்தவகையில், இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட அபிஜித் தீப்கே இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவதற்காகமேடையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென அவரை ஓங்கி அறைய முயன்று, தாக்கியுள்ளார். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது.
அபிஜித் தீப்கே தாக்கப்படுவதைக் கண்ட அவரது ஆதரவாளர்களும், அங்கிருந்த பொதுமக்களும் உடனடியாகத் திரண்டு, தாக்குதல் நடத்திய நபரைத் திருப்பித் தாக்கியிருக்கின்றனர்.
இந்தசூழலில் தான், அபிஜித் தீப்கே தாக்கப்படும் இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.