இந்தியா

நீதிபதி மீது பாலியல் புகார் விவகாரம் : உச்சநீதிமன்றத்தை சுற்றி 144 தடை உத்தரவு

நீதிபதி மீது பாலியல் புகார் விவகாரம் : உச்சநீதிமன்றத்தை சுற்றி 144 தடை உத்தரவு

webteam

தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் நிராகரிக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் மற்றும் பெண் உரிமை ஆர்வலர்கள் போராட்டம் நடத்திய நிலையில் உச்சநீதிமன்றத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இந்தப் புகாரை அடுத்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, இதுகுறித்து விசாரிக்க மூத்த நீதிபதி பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டார். மேலும் இக்குழு ரகசியமாக விசாரணை நடத்தும் எனக் கூறப்பட்டது. 

நீதிபதி பாப்டே தலைமையிலான குழுவில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று இக்குழு தலைமை நீதிபதி மீதான புகாரில் முகாந்திரம் ஏதுமில்லை எனக் கூறி மனு தள்ளுபடி செய்தது. 

இந்நிலையில், தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விவகாரத்தை அணுகிய முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்களும் பெண் உரிமை ஆர்வலர்களும் இணைந்து போராட்டம் நடத்தினர். பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களை போலீசார் கைது செய்து இரண்டுக்கும் மேற்பட்ட பஸ்சில் அழைத்து சென்றனர்.

இந்த நிலையில் மேற்கொண்டு போராட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியான நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தை சுற்றி தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.