இந்தியா

நீதிபதி சுக்லா மீது ஊழல் வழக்குப் பதிய உச்சநீதிமன்றம் அனுமதி 

நீதிபதி சுக்லா மீது ஊழல் வழக்குப் பதிய உச்சநீதிமன்றம் அனுமதி 

webteam

இந்தியாவிலேயே முதன்முறையாக பதவியிலிருக்கும் நீதிபதி மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அனுமதி வழங்கியுள்ளார். 

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் எஸ்.என்.சுக்லா நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவர் மீது ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியின் மாணவர் சேர்க்கையில் ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதாவது இந்தக் கல்லூரியில் 2017-18ஆம் ஆண்டி மாணவர் சேர்க்கைக்கான கால அளவை உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி நீட்டித்து நீதிபதி சுக்லா அனுமதி வழங்கினார். 

              (நீதிபதி எஸ்.என்.சுக்லா)

இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உள் விசாரணைக் குழு விசாரித்தது. இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் இவரை நீக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருமாறு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மத்திய அரசிற்கு கடிதம் எழுதியிருந்தார்.  

இதற்கிடையே இந்த மருத்துவக் கல்லூரி ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சிபிஐ நீதிபதி சுக்லா மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டது. ஏனென்றால், 1991ஆம் ஆண்டு கே.வீராசாமி வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தது. அதாவது பணியில் இருக்கும் உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குத் தொடரவேண்டும் என்றால் முதலில் ஆதாரங்களை தலைமை நீதிபதிக்கு அனுப்பி அனுமதி பெறவேண்டும். இதன்படி சிபிஐ அனுமதிக்காக இந்தக் கடித்தத்தை எழுதியது. 

இந்நிலையில் சிபிஐ எழுதிய கடிதத்திற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதிலளித்துள்ளார். அதில், “நீங்கள் குறிப்பிட்டுள்ள வழக்கின் ஆதாரங்களை நான் ஆராய்ந்து பார்த்தேன். இதில் போதிய ஆதாரங்கள் உள்ளதால், இந்த நீதிபதி மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி வழங்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

இதன்மூலம் நாட்டிலேயே முதன்முறையாக பணியிலுள்ள நீதிபதி மீது வழக்குப் பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக்காலத்தின் போது நீதிபதி சுக்லா மீது வழக்குப்பதிவு செய்ய சிபிஐ அனுமதி கோரியிருந்தது. அப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இதனை மறுத்தார் எனத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.