மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில், மாணவர்கள் பலர் காயம் அடைந்தனர். மாணவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து நாடு முழுவதும் இன்று போராட்டஙகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் கோவை, மதுரை மற்றும் சென்னை போன்ற பல ஊர்களில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆதரவு தெரித்துவிள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை இந்தியாவின் மீது பாசிஸ்டுகளால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மிகப் பெரும் ஆயுதங்கள். இந்த ஆயுதங்களை எதிர்ப்பதற்கு அமைதியாக, வன்முறையற்ற சத்தியாக்கிரக வழிமுறையை மேற்கொள்வதே சிறந்ததாகும். இந்த இரு சட்டங்களுக்கும் எதிராக அமைதி வழியில் போராடும் அனைவருடனும் நான் ஒன்றுபட்டு நிற்கிறேன்” என்று கூறியுள்ளார்.