மம்தா பானர்ஜி எக்ஸ் தளம்
இந்தியா

போலி கையெழுத்து | வீட்டில் சிஐடி போலீசார் ரெய்டு.. மம்தாவுக்கு தொடர்ந்து பின்னடைவு!

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் வீட்டில் மாநில சிஐடி போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

Prakash J

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பலத்த தோல்வியடைந்தார். இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கோட்டை தகர்க்கப்பட்டு, முதன்முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்தது. அதேநேரத்தில், தேர்தல் தோல்வி காரணமாக திரிணாமுல் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்கள் பலரும் கட்சி மீதும் தலைமை மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டு உள்ளது. குறிப்பாக, அக்கட்சியின் 61 எம்.எல்.ஏக்கள் மம்தாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தவிர, அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரிதாபிரதா, 61 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் எதிர்க்கட்சித் தலைவராகி இருக்கிறார். இன்னொரு புறம் அவர் கட்சியைச் சேர்ந்த எம்பிக்களில் 28 பேரில் 20 பேரும் மம்தாவுக்கு எதிராக திரும்பியுள்ளனர்.

மேலும் திரிணாமுல் காங்கிரஸில் மம்தாவின் எதிர்த்தரப்பு எம்பிக்கள் 20 பேரும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர். இதனால் மாநிலத்திலும் மத்தியிலும் மம்தாவின் செல்வாக்கு சரிவைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கையெழுத்தை போலியாக தயாரித்து மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தரப்பு சபாநாயகரிடம் கொடுத்ததாக எதிர்தரப்பு குற்றஞ்சாட்டி வருகிறது. இந்தச் சூழலில், மம்தா பானர்ஜியின் வீட்டில் மாநில சிஐடி போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். எம்எல்ஏக்களின் கையெழுத்து போன்று போலி ஆவணம் தயாரித்தது குறித்து சிஐடி போலீசார் இந்த சோதனை நடத்தி வருகின்றனர். மம்தா பானர்ஜியின் வீடும், திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகமும் ஒரே கட்டடத்தில் செயல்பட்டு வரும் நிலையில் சிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.