இந்தியா

ஹெலிகாப்டர் பேர வழக்கு: நாடு கடத்தப்பட்ட இடைத்தரகர் டெல்லியில் கைது!

webteam

ஹெலிகாப்டர் பேரம் தொடர்பான வழக்கில் துபாயில் இருந்து நாடுகடத்தப்பட்ட இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது முக்கிய தலைவர்கள் பயன்பாட்டுக்காக, இந்திய விமானப்படைக்கு 12 ஹெலிகாப்டர்கள் வாங்க, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற இத்தாலி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் ரூ.423 கோடிக்கு ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்ததை அடுத்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு இடைத்தரகராக செயல்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் (54) துபாயில் வசித்து வருகிறார்.

இவரை விசாரணைக்காக அனுப்பி வைக்குமாறு இந்திய அரசு கோரிக்கை வைத்தது. இது தொடர்பாக துபாய் போலீஸ் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் துபாய் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து அவர் இந்தியாவுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டார். அதன்படி அவர் வந்த விமானம் நேற்றிரவு டெல்லி வந்து சேர்ந்தது. விமான நிலையத்திலேயே அவரை சிபிஐ கைது செய்தது. அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.