இந்தியா

சித்திரை முழுநிலவு விழா: மங்கலதேவி கண்ணகி கோவிலில் குவியும் பக்தர்கள்

kaleelrahman

மங்கலதேவி கண்ணகி கோவிலில் இன்று (16.04.22) நடைபெறும் 'சித்திரை முழுநிலவு விழா' தேனி மற்றும் இடுக்கி மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் மேகமலை புலிகள் காப்பகம், கேரளாவின் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம் ஆகிய இரு மாநில எல்லையான மங்கலதேவியில் அமைந்துள்ளது கண்ணகி கோவில். கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் அடி உயரம் கொண்ட கண்ணகி கோவில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இத்தனை பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க கண்ணகி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தின் பௌர்ணமி தினத்தன்று சித்திரை முழுநிலவு விழா கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்திலும் கேரளாவிலும் கொரோனா தோற்று பரவல் காரணமாக சித்திரை முழுநிலவு விழாவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது இரு மாநிலங்களிலும் தொற்று பரவல் குறைந்ததன் காரணமாக இந்த ஆண்டு கண்ணகி கோவிலில் சித்திரை முழுநிலவு விழா நடத்த இரு மாநில அரசுகளும் முடிவு செய்துள்ளன. இதற்காக தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் வனத்துறையினர் கலந்துகொண்ட இரு மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று ( ஏப்ரல் 16-ஆம் தேதி) சித்திரை மாதத்தின் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று கண்ணகி கோவிலில் சித்திரை முழுநிலவு விழா கொண்டாடப்படுகிறது. இதையடுத்து கண்ணகி கோவிலுக்கு சென்று வர இன்று காலை 6 முதல் இரு மாநில வன பாதைகளும் திறந்து விடப்பட்டுள்ளன.

சித்திரை முழு நிலவு விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக குடிநீர், போக்குவரத்து, மருத்துவம், சுகாதாரம், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரும் பணிகள் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது.

பக்தர்களின் பயணமும் தரிசனமும் பாதுகாப்பான முறையில் இருக்க 1,500-க்கும் மேற்பட்ட இரு மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.