2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்திய தேசிய காங்கிரஸ் குறிப்பிடத்தக்க அரசியல் எழுச்சியைப் பெற்றிருந்தாலும், தொடர்ச்சியான தேர்தல் வெற்றிகளாக அதை மாற்றுவதில் அமைப்புரீதியான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக தெலங்கானா, கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆட்சியில் இருந்தாலும், பாஜகவுடன் நேரடிப் போட்டி நிலவும் மாநிலங்களில் காங்கிரஸின் வாக்கு வங்கியை முழுமையான வெற்றியாக மாற்றுவதில் பலவீனங்கள் தொடர்கின்றன.
இந்த நிலையில்தான், எதிர்க்கட்சியாக மக்கள் கவனத்தைப் பெற களப் போராட்டங்களில் சமீபகாலங்களாக ஈடுபட்டு வருகிறது. வேலையின்மை, விலைவாசி உயர்வு, அரசியலமைப்புப் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகள் தொடர்பான பிரச்னைகளில் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதுடன், தற்போது அதற்கான போராட்டங்களிலும் களமிறங்கியுள்ளது. எனினும், காங்கிரஸின் இத்தகைய செயல்முறைகள் ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தியைத் திரட்ட உதவுமே தவிர, 2029இல் தேர்தல் வெற்றியை உறுதிசெய்துவிடாது என்கின்றனர் அரசியலாளர்கள்.
இந்த நிலையில்தான், மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவருமான சிராக் பஸ்வான் காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்ளிடம் பேசிய அவர், “2029 பொதுத்தேர்தலை மறந்துவிடுங்கள், 2034-லும்கூட காங்கிரஸால் மத்தியில் ஆட்சிக்கு வர முடியாது” என்றார். மேலும் ’காங்கிரஸ் கட்சி தேர்தல் களத்தில் மக்களைச் சந்தித்து வெற்றி பெறுவதற்குப் பதிலாக, நாட்டில் போராட்டங்கள் மற்றும் குழப்பங்கள் மூலம் ஆட்சியை மாற்ற முயல்கிறது; பொதுமக்கள் காங்கிரஸை ஆதரிக்கவில்லை. தேர்தலில் வெற்றி பெறுவதற்குப் பதிலாக அது குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறது’ எனக் குற்றஞ்சாட்டினார்.
பங்களாதேஷ், நேபாளம் போன்ற அண்டை நாடுகளில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களை சுட்டிக்காட்டி, அதுபோன்றதொரு சூழலை இந்தியாவில் உருவாக்க காங்கிரஸ் முயல்வதாக அவர் தெரிவித்தார். அதேநேரத்தில், ‘தனது லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), கூட்டணியில் நீடித்தாலும் இல்லாவிட்டாலும், வரவிருக்கும் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும்’என்றும் அறிவித்தார்.