இந்தியா

இந்திய மசாலா உணவுகளையும், நிலவேம்பு கசாயத்தையும் விரும்பி உண்ணும் சீனர்கள்..!

webteam

கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தங்களை காத்துக்கொள்ள சீனர்கள் இந்தியர்களின் மசாலா வகை உணவுகளையும், நிலவேம்பு கசாயத்தையும் சாப்பிடத் தொடங்கியுள்ளனர்.

சீனாவின் ஹாங்ஹாங் நகரில் இதுவரை 106 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு இருக்கும் ஒரு தென்னிந்திய உணவகம் ஒன்றில் இந்தியர்களின் உணவான மசாலா உணவு வகைகளும், நிலவேம்பு கசாயமும் வழங்கப்படுகிறது. இந்த உணவு வகைகளை முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது சீனர்கள் விரும்பி சாப்பிடுவதாக ஹாங்ஹாங்கில் செயல்பட்டு வரும் தென்னிந்திய உணவகத்தின் உரிமையாளர் கூறினார்.

இது குறித்து அவர் கூறும் போது, “பெரும்பான்மையான இந்தியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்ற செய்தி சீனர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவர்கள் தற்போது இந்திய உணவு வகைகளை விரும்பி உண்கின்றனர். இட்லி, தோசையை தவிர்த்து இந்தியர்களின் கறி வகைகளை சீனர்கள் அதிகம் விரும்பி உண்கின்றனர். குறிப்பாக இந்தக் கறி வகைகளில் சேர்க்கப்படும் மஞ்சள், கிராம்பு, லவங்கம் உள்ளிட்ட பொருட்கள் அவர்களுக்கு ஒரு வித்தியாசமான ருசியை கொடுத்துள்ளது.

இது மட்டுமல்லாமல் உணவகத்திற்கு வரும் அனைத்து நபர்களுக்கும் நில வேம்பு கசாயத்தை இலவசமாக வழங்குகிறோம். மேலும், அதில் உள்ள மருத்துவ குணங்களையும் விவரிக்கிறோம். நிலவேம்பு கசாயம் கசப்பாக இருந்த போதிலும் அவர்கள் அதனை விரும்பி குடிக்கின்றனர்” என்றார்.