இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை இன்றில்லை... நேற்றில்லை... பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்திய பகுதிகளுக்குள் சீன படைகள் ஆக்கிரமிப்பு செய்வதும், எல்லையில் அத்துமீறி கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது, இந்திய பகுதிகளை இணைந்து வரைப்படங்களை வெளியிடுவது என சீனாவின் எல்லை மீறிய செயல்பாடுகள் தொடரும் சூழலில், இந்திய தரப்பில் இருந்தும் அவ்வப்போது தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இப்படியான சூழலில், அருணாச்சலப் பிரதேசத்திற்கு ஜாங்னான் எனப் பெயரிட்டுள்ள சீனா, இங்குள்ள சில பகுதிகளின் பெயர்களை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஜாங்னானில் உள்ள சில புவியியல் பெயர்களை தரவுகளின் அடிப்படையில் மாற்றியுள்ளதாக இந்த விவகாரத்தில் சீனா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த முயற்சிக்கு இந்தியாதரப்பில் கடும் கண்டனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
வெளியுறவுத்துறைஅமைச்சகம் வெளியிட்டுள்ளஅறிக்கையில், சீனாவின் வீண் மற்றும் அபத்தமான முயற்சிகளை மேற்கொள்வதை கவனித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படைப்புரீதியான பெயரிடுதல், அருணாச்சலப்பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக எப்போதும் இருக்குமென்ற மறுக்கமுடியாத உண்மையை மாற்ற முடியாது என வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
அதேசமயம், இந்தவிவகாரம் தொடர்பாக பேசியவெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்,கிரியேட்டிவ் பெயர்கள், யதார்த்தத்தைமாற்றாது எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், சீனாவைச் சேர்ந்த சில செய்தி நிறுவனங்களின் எக்ஸ் தள பக்கங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. அருணாச்சல பிரதேசத்தின் சில ஊர்களின் பெயர்களை தங்கள் நாட்டு மொழியில் சீனா குறிப்பிட்ட நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சரிபார்க்கப்படாத தகவல்களை வெளியிட வேண்டாம் என பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் சீன ஊடகங்களை கேட்டுக்கொண்டிருந்தது.