இந்தியா

இந்திய அரிசியை இறக்குமதி செய்யும் சீனா... காரணம் இதுதான்..!

webteam

இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய சீனா முடிவெடுத்துள்ளது. 

மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனா பல்வேறு நாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்கிறது. சுமார் வருடத்திற்கு 4 மில்லியன் டன் அரிசியை சீனா இறக்குமதி செய்கிறது. ஆனால் அருகில் இருந்தாலும் இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதியை சீனா விரும்பவில்லை. அதற்கு அரசியல் ரீதியாக பல காரணங்கள் உள்ளன.

இரு நாடுகளுக்கு இடையே எப்போதும் எல்லைப்பிரச்னை இருந்து வரும் நிலையில் அரிசி இறக்குமதியை சீனா தவிர்த்து வந்தது. ஆனால் தற்போது தன்னுடைய நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது அந்நாட்டு அரசு. அதிக தேவை மற்றும் இந்தியாவின் குறைந்தவிலை போன்ற காரணங்களால் சீனா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. டிசம்பர்-பிப்ரவரி இறக்குமதி விவரத்தின்படி சீனா ஒரு லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்யவுள்ளது. ஒரு டன் அரிசி ரூ. 22ஆயிரம் என்ற விலையில் சீனாவுக்கு ஏற்றமதி செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனா வழக்கமாக அரிசி இறக்குமதி செய்யும் தாய்லாந்து, வியட்னாம்,மியான்மர், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஒரு டன்னுக்கு கொடுக்கும் விலையை விட இந்தியா 30 டாலர்கள் வரை குறைவாக (ரூ.2200) கொடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரிசி ஏற்றுமதி குறித்து பேசியுள்ள அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணா ராவ், கிட்டத்தட்ட 30 வருடங்களில் தற்போது தான் சீனா மீண்டும் அரிசி இறக்குமதிக்கு இந்தியாவை நாடியுள்ளது. இந்திய அரிசியின் தரத்தை பொருத்து எதிர்காலத்தில் இறக்குமதி செய்யும் அரிசியின் அளவு அதிகமாகும் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.