இந்தியா

மீண்டும் பரவும் கொரோனா... தயாராக இருக்கிறதா இந்திய அரசு? ஓர் அலசல்!

webteam

உலகெங்கிலும் 6 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்று உலகையே புரட்டிப்போட்ட கோவிட் -19 தொற்றுநோய்க்கு காரணமானது கொரோனா வைரஸ். இது உருவான இடமாக சொல்லப்படும் வூஹானில் தற்போது மீண்டும் திரிபு மாற்றமடைந்த கொரோனா பரவுவதாக தகவல்கள் வெளியாகின்றன. 

உலகமக்கள் இப்போதுதான் கொரோனாவிலிருந்து மீண்டு இயல்புநிலைக்கு திரும்பிவருகின்றனர் என்ற நிலையில், இப்போது சீனாவில் மீண்டும் கொரோனா பரவுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய கோவிட் அலை, இறப்பு எண்ணிக்கையை அதிகரித்துவருகிறது என்றும் சொல்லப்படுகிறது.

IHME வெளியிட்ட புள்ளிவிவர மாதிரி ஒன்றின்படி, 2023 ஆம் ஆண்டுக்குள் கோவிட்-19 காரணமாக சீனாவில் மட்டுமே சுமார் 1.6 மில்லியன் இறப்புகள் காணப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஏப்ரல் 2023க்குள் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறிப்படுகிறது. சீன அரசாங்கம் தனது பூஜ்ஜிய கோவிட் கொள்கையை திடீரென கைவிட்ட பிறகு, இச்செய்தி வந்துள்ளது.

இதற்கிடையில், இந்திய அரசு தன் மக்களுக்கு சில முன்னெச்சரிக்கையை கொடுத்துள்ளது. அவை என்னென்ன என்று அறிவதே இக்கட்டுரை. இதுதொடர்பாக கோவிட் மறு ஆய்வுக் கூட்டம் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்றது. அதில் அனைத்து பங்குதாரர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பிறகு பேசிய சுகாதாரத்துறை அமைச்சர், “கோவிட் இன்னும் முடியவில்லை. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அரசு தரப்பில் கொரோனா பரவல் தொடர்பான கண்காணிப்பைப் பலப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

மேலும் நாட்டில் புழக்கத்தில் இருக்கும் புதிய மாறுபாடுகளைச் சரியான நேரத்தில் கண்டறிவதை உறுதி செய்வதற்காக, இந்திய SARS-CoV-2 Genomics Consortium (INSACOG) கட்டமைப்பு மூலம் கொரோனா பாசிடிவ் என வருவோருக்கு, அவர்களுக்கு உறுதியான கொரோனாவின் திரிபை கண்காணிக்கும் வசதிகளை மேம்படுத்த இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது பொதுச் சுகாதார நடவடிக்கைகளை சரியாக மேற்கொள்வதற்கு உதவும் என சொல்லப்படுகிறது. இவற்றுடன் அனைத்து கோவிட்-19 பாசிடிவ் நபர்களின் மாதிரிகளையும் எடுத்து, அவற்றை INSACOG விற்கு தினசரி அடிப்படையில் அனுப்புமாறு மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இதுபற்றி பேசுகையில், “இந்த ஆண்டு டிசம்பர் 19 வரையில், சராசரி தினசரி கொரோனா எண்ணிக்கை 158 ஆக குறைந்து காணப்படுகிறது. இருப்பினும், உலகளாவிய தினசரி சராசரி கொரோனா எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 6 வாரங்களை பார்க்கையில், அதில் கடந்த 1 வாரத்தில் மட்டும் 5.9 லட்சம் தினசரி சராசரி கொரோனா பாசிடிவ் கேஸ்கள் பதிவாகியுள்ளன. ஓமிக்ரான் மாறுபாட்டின் புதிய மற்றும் மிகவும் பரவக்கூடிய BF.7 திரிபு சீனாவில் கோவிட் நோய்த்தொற்றுகளின் பின்னால் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது” என விளக்கமளித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜூனில்தான் இந்தியாவில் கோவிட்-19 கட்டுப்பாடுகளில் தளர்த்தப்பட்ட மற்றும் புதிய சில வழிகாட்டுதல்கள் மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அந்த வழிகாட்டுதல் மூலமே புதிய SARS-CoV-யின் பாதிப்புகளைக் கண்டறிந்து அதை விரைந்து கட்டுப்படுத்தவும், சந்தேகிக்கப்படும் கொரோனா கேஸ்களை முன்கூட்டியே கண்டறியவும், பாசிடிவ் வரும் நபர்களை தனிமைப்படுத்தவும் முடிந்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இவற்றின் காரணமாக இந்திய தற்போதுவரை புதிய கொரோனா திரிபை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாகவே தெரிகிறது.

இந்நிலையில் தற்போது மீண்டும் முகக்கவசம் அணிவதையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத்தில் அவையில் பங்கேற்ற அனைவரும் இன்று முகக்கவசத்துடனேயே பங்கேற்றிருந்தனர்.

-அருணா ஆறுச்சாமி