வீட்டில் பலரும் செல்லப் பிராணிகளை வளர்த்து வருகிறார்கள். இதில் பலரும் நாய்களை விரும்பி வாங்கி வளர்க்கிறார்கள். அவர்கள், அதை தங்களது குழந்தையைப்போலவே வளர்க்கிறார்கள். அதற்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுக்கிறார்கள். தவிர, வெளியிலும் எங்கும் அழைத்துச் செல்கிறார்கள். எனினும், செல்லப்பிராணிகளை வளர்ப்பதும் நேசிப்பதும் அவர்களுடைய சொந்த விஷயம் என்றாலும், அவற்றின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிசெய்வதும் வளர்ப்பவர்களின் கடமையாகும். இந்த நிலையில், ஓடும் ரயிலில் ஏற்ற முயன்ற நாய் ஒன்று தண்டவாளத்தில் விழுந்தது. இது, இணையத்தில் வைரலாகி வருவதுடன், எதிர்வினைகளையும் தூண்டியுள்ளது. இந்த சம்பவம் ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரத்தில் நிகந்துள்ளது.
அந்த வீடியோவில், தனது நாயை இழுத்துக்கொண்டு ரயிலைப் பிடிக்க ஒரு நபர் விரைந்து செல்கிறார். எனினும் ரயில் புறப்பட்டுச் செல்கிறது. அப்போது திறந்திருக்கும் கதவு வழியாக அந்த நாயை ரயில் பெட்டிக்குள் ஏற்றிவிட முயல்கிறார். ஆனால், அந்த நாய் அதில் ஏறமுடியாமல் சிரமப்படுகிறது. ஒருகட்டத்தில் அந்த நாய், பிளாட்பாரத்திலிருந்து தண்டவாளத்திற்குள் விழுந்தது.
இதனால், ஓடிக் கொண்டிருக்கும் அந்த ரயிலில் இருந்து நாய் தப்பித்ததா அல்லது அடிப்பட்டதா என அந்த நாய்க்கு என்ன ஆனது எனத் தெரியாமல் அங்கிருக்கும் பயணிகள் தவிக்கின்றனர். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இறுதியில், நாய் ரயிலின் அடியில் ஊர்ந்து மறுபுறம் சென்றதாகவும், நாயும் அதன் உரிமையாளரிடம் இணைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்தச் சம்பவம் இணையத்தில் கடுமையான எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது.
பயனர்கள், “அந்த நபரை செல்லப்பிராணிகளிடமிருந்து விலக்கி வைக்கவும், பொறுப்பைக் கையாள முடியாவிட்டால் செல்லப்பிராணியை வளர்க்காதீர்கள். இது மனவேதனை அளிக்கிறது, செல்லப்பிராணியின் உயிரைப் பணயம் வைத்ததற்காக உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளனர். மற்றொரு பயனர், ”செல்லப்பிராணிகளை ரயில்கள் மற்றும் விமானங்கள் என எல்லா இடங்களுக்கு அழைத்துச் சென்றாலும், அவற்றின் பாதுகாப்பை மட்டுமல்ல, சுற்றியிருக்கும் மனிதர்களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். இன்னொரு பயனரோ, "சமூக ஊடகங்களில் மக்கள் இந்த மனிதரை தேவையில்லாமல் ட்ரோல் செய்து அவமதிக்கிறார்கள். சகோதரர்களே, எல்லோரும் தவறு செய்கிறார்கள்; எப்படியிருந்தாலும், அவர் வேண்டுமென்றே நாயை காயப்படுத்தவில்லை. மாறாக, அவர் அதைக் காப்பாற்றவும் முயன்றார். நாய் மீது அனுதாபம் காட்டுபவர்கள் சில சமயங்களில் மனிதர்களிடமும் அனுதாபம் காட்ட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.