இந்தியா

குழந்தையின் சடலத்தை 120 கி.மி ஸ்கூட்டரில் எடுத்துச் சென்ற அவலம்: ஆந்திராவில் அதிர்ச்சி

webteam

விசாகப்பட்டினத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் பிறந்து 14 நாட்களே ஆன குழந்தை உயிரிழந்த நிலையில், சடலத்துடன் 120 கிலோமீட்டர் தூரம் தம்பதியர் கூட்டரில் பயணித்த அவலம்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கிங் ஜார்ஜ் என்ற பெயரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 2ஆம் தேதி பிரசவத்திற்காக சேர்ந்த குமுடு கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், பிறந்தது முதல் குழந்தைக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் இருந்ததால் மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதையடுத்து விசாகப்பட்டினத்தில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தங்களுடைய சொந்த ஊரான குமுடு கிராமத்திற்கு குழந்தையின் உடலை பெற்றோர் ஸ்கூட்டரில் எடுத்து சென்றனர். இதைத் தொடர்ந்து பாடேரு அருகே அவர்கள் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த ஆம்புலன்ஸ் குழந்தையின் உடலை ஏற்றிக் கொண்டு குமுடு கிராமத்திற்குச் சென்றது.

இந்நிலையில், குழந்தையின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி அளிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டோம். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை என்று இறந்த குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டினர். பிறந்து 14 நாட்களே ஆன குழந்தையின் சடலத்துடன் பெற்றோர் 120 கிலோமீட்டர் ஸ்கூட்டரில் பயணித்து சம்பவம் மாநில அளவில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்த நிகழ்வு மாநில அரசின் செயல்படாத தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்று தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் நாரா லோகேஷ் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் ஆந்திர முதல் ஜெகன் மோகன் ரெட்டி, இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கையை அளிக்க வேண்டுமென விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

ஆட்சியரின் உத்தரவை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில் குழந்தையின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம். ஆனால், அதற்குள் யாரிடமும் சொல்லாமல் குழந்தை உடலுடன் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். பெற்றோர் தங்கள் குழந்தையின் உடலுடன் மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறாமல் சென்று விட்டது பற்றி பாடேரு பகுதி மலைவாழ் மக்கள் ஒருங்கிணைப்பாளருக்கு தகவல் அளித்தோம். அவர்கள் பாடேரு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்து கொடுத்து குழந்தையின் உடலை குமுடு கிராமத்திற்கு கொண்டு சேர்த்தனர் என்று தெரிவித்துள்ளது.

ஆனால் அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்த குழந்தையின் உடலை அங்கிருந்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரியாமல் கொண்டு செல்வது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.