திருச்சி மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் 15 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் சமீபத்தில் ஆழ்துளை கிணறுகளிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் தொடர்பாக தற்போது நினைவு கூர்வோம்.
மார்ச் 2019:
கடந்த மார்ச் மாதம் ஹரியானா மாநிலத்தின் ஹிசர் மாவட்டத்தில் 18 மாத குழந்தை ஒன்று 60 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இந்தக் குழந்தையை தேசிய பேரிடர் மீட்புக் குழு 48 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டது.
பிப்ரவரி 2019:
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 6 வயது குழந்தை ரவி பண்டிட் பில் 200 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். இந்தக் குழந்தையை தேசிய பேரிடர் மீட்புக் குழு 16 மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்டது.
ஜனவரி 2019:
மத்திய பிரதேச மாநிலம் சிங்ரவ்லி மாவட்டத்தில் 3 வயது குழந்தை ஒன்று 30 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தது. 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தை மீட்கப்பட்டது.
ஆகஸ்ட் 2018:
பிகார் மாநிலத்தில் சனா என்ற மூன்று வயது குழந்தை 110 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இந்தக் குழந்தையை 30 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு தேசிய பேரிடர் மீட்புக் குழு மீட்டது.
இதேவகையில், திருச்சி அருகே நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையையும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்து மீட்பார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.