இந்தியா

ஜப்பானிய மொழியை கற்கும் மாணவர்கள் - மகாராஷ்டிராவில் அசத்தும் அரசுப் பள்ளி

webteam

மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம் காடிவாட். இங்குள்ள அரசுப் பள்ளியில் மாணவர்கள் ஜப்பானிய மொழியை விருப்பத்துடன் கற்றுவருகிறார்கள். அதற்கே ஆச்சரியப்பட்டால் எப்படி? அவர்கள் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்திலும் ஆர்வம் கொண்டுள்ளார்கள்.

நல்ல சாலைகள், அடிப்படை கட்டுமான வசதிகள், இணைய தொழில்நுட்பம் என அனைத்து வசதிகளையும் பெற்று தன்னிறைவு பெற்றுள்ளதாகத் திகழ்கிறது காடிவாட் கிராமம். அதனால் அங்குள்ள அரசுப் பள்ளியில் சேர்ந்து மாணவர்கள் ஆர்வத்துடன் படித்துவருகிறார்கள்.

கடந்த செப்டம்பர் முதல் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஏதாவது ஒரு வெளிநாட்டு மொழியைக் கற்றுக்கொடுக்கும் திட்டத்தை பள்ளி நிர்வாகம் தொடங்கியது. அனைத்து மாணவர்களும் ரோபோடிக்ஸ் படிக்க ஆர்வம் கொண்டதால், ஜப்பான் மொழியைத் தேர்ந்தெடுத்துள்ளார்களாம்.


ஜப்பானிய மொழியைக் கற்பிக்க ஆசிரியர் இல்லாமல் தவித்த பள்ளி நிர்வாகம், அவுரங்காபாத்தைச் சேர்ந்த மொழியியல் வல்லுநர் சுனில் ஜோகாடியாவை நியமித்து கற்பித்துவருகிறது. "தினமும் ஆன்லைன் வழியாக பாடங்களை அவர் நடத்திவருகிறார். மாணவர்கள் ஒருவருக்கொருவர் ஜப்பானிய மொழியில்தான் பேசிக்கொள்கிறார்கள்" மகிழ்ச்சியுடன் கூறுகிறார் பள்ளித் தலைமை ஆசிரியர் பத்மாகர் ஹூல்ஜூட்.