இந்தியாவில் 5-19 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், இளைஞர்களின் மரணங்களில் புற்றுநோய் முக்கிய காரணிகளில் ஒன்றாக உயர்ந்துள்ளது. லான்செட் வெளியிட்ட உலகளாவிய நோய் சுமை 2023 ஆய்வு படி, இரத்தப் புற்றுநோய், மூளைக் கட்டி, நிணநீர்ச் சுரப்பி புற்றுநோய் அதிகரித்து, தட்டம்மை, காசநோய், எச்ஐவி போன்ற தொற்றுநோய்களை விட அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.
செய்தியாளர் - இனியா
பொதுவாகப் புற்றுநோய் என்றாலே அது முதியவர்களுக்கோ அல்லது நடுத்தர வயதினருக்கோ வரும் பாதிப்பு என்றுதான் நாம் நினைக்கிறோம். ஆனால், இந்தியாவில் 5 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் உயிரிழப்பிற்கு மிக முக்கியமான 10 காரணிகளில் ஒன்றாக இப்போது புற்றுநோய் உருவெடுத்துள்ளது.. சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘தி லான்செட்’ (The Lancet) மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள 'உலகளாவிய நோய் சுமை 2023' (Global Burden of Disease 2023) ஆய்வின் முடிவுகள், நாம் உடனடியாகக் கவனிக்க வேண்டிய பல உண்மைகளை முன்வைக்கின்றன.
இந்தியச் சிறுவர்களிடையே குறிப்பாக இரத்தப் புற்றுநோய், மூளைக் கட்டிகள் மற்றும் நிணநீர்ச் சுரப்பி புற்றுநோய் ஆகிய பாதிப்புகள் அதிகளவில் காணப்படுவதாக இந்த ஆய்வு கூறுகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு கணக்கின்படி, உலகம் முழுவதும் 3.77 லட்சம் புதிய புற்றுநோய் பாதிப்புகள் சிறுவர்களிடையே கண்டறியப்பட்டுள்ளன. இதில் 1.44 லட்சம் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், புற்றுநோயால் உயிரிழக்கும் குழந்தைகளில் 94 சதவீதத்தினர் இந்தியா போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதுதான்.
உலகளவில் தட்டம்மை, காசநோய் மற்றும் HIV/AIDS போன்ற பொதுவான தொற்றுநோய்களை விட, புற்றுநோய் இப்போது அதிக சிறுவர்களைப் பலி வாங்குகிறது. குறிப்பாக தெற்காசியாவில் மட்டும் உலகளாவிய சிறுவர் புற்றுநோய் மரணங்களில் 20.5 சதவீதம், அதாவது ஐந்தில் ஒரு பங்கு உயிரிழப்புகள் நிகழ்கின்றன. மேலும், கடந்த 1990 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில், சிறுவர் புற்றுநோய் மரணங்கள் 16.9 சதவீதம் அதிகரித்துள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை, 2023-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 17,000 சிறுவர்கள் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். இது குறித்து சென்னை அடையார் புற்றுநோய் நிறுவனத்தின் மருத்துவப் பேராசிரியர் டாக்டர் வெங்கட்ராமன் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "இந்தியாவின் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டமிடலில் இன்னும் சிறுவர் புற்றுநோய் சேர்க்கப்படவில்லை" என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். தற்போதுள்ள தேசியத் திட்டம் முக்கியமாக வாய், கருப்பை வாய் மற்றும் மார்பகப் புற்றுநோய் ஆகிய மூன்று வகைகளை மட்டுமே கண்டறிய முன்னுரிமை அளிக்கிறது.
உலகளவில் புதிய புற்றுநோய் பாதிப்புகள் ஓரளவுக்கு நிலையாக இருந்தாலும், உயிரிழப்புகள் 27 சதவீதம் குறைந்துள்ளன. ஆனால், இந்த முன்னேற்றம் பெரும்பாலும் பணக்கார நாடுகளிலேயே காணப்படுகிறது. புற்றுநோயால் இழக்கப்படும் ஆரோக்கியமான வாழ்நாட்களைக் கணக்கிடும் ‘Disability-Adjusted Life Years' குறியீட்டில் 94 சதவீத இழப்பு வளரும் நாடுகளிலேயே ஏற்படுகிறது. இதனைத் தடுக்க, தேசிய அளவில் சிறுவர் புற்றுநோய்க்கான தனித்திட்டங்களை உருவாக்குவதுடன், ஆரம்பக்கால கண்டறிதல், கீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை போன்ற வசதிகளை மேம்படுத்த வேண்டும். மேலும், முறையான புற்றுநோய் பதிவேடுகளை பராமரிப்பதன் மூலமே வருங்காலத்தில் இந்த உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என ஆய்வின் முதன்மை ஆசிரியர் லிசா ஃபோர்ஸ் (Lisa Force) மற்றும் பிற ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.