இந்தியா

மருத்துவர் செய்த மிக அஜாக்கிரதையான செயலால் சிறுமிக்கு எச்.ஐ.வி தொற்று!

JustinDurai

உத்தரப்பிரதேசத்தில் பல நோயாளிகளுக்கு பயன்படுத்திய ஊசியை வைத்து மருத்துவம் பார்த்ததால் சிறுமி ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் எட்டா மாவட்டத்தில் உள்ள ராணி அவந்தி பாய் லோதி அரசு மருத்துவக்கல்லூரியில் கடந்த மாதம் 20ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட ஒரு சிறுமிக்கு எச்.ஐ.வி தொற்று உள்ளதாக கூறி மருத்துவமனை ஊழியர்கள் அந்த சிறுமியையும் அவரது பெற்றோரையும் வலுக்கட்டாயமாக அங்கே இருந்து வெளியேற்றினர்.  

இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் எட்டா மாவட்ட மாஜிஸ்திரேட் அங்கித் குமார் அகர்வாலிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், பல நோயாளிகளுக்கு பயன்படுத்திய ஊசியை தங்கள் மகளுக்கு மருத்துவர் செலுத்தியதாகவும், அதன் விளைவாக தங்கள் மகளுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதாகவும் கூறினர்.

இந்த புகாரை மாஜிஸ்திரேட், தலைமை மருத்துவ அதிகாரி உமேஷ் குமார் திரிபாதியிடம் விரைந்து விசாரிக்குமாறு உத்தரவிட்டார். இதுதொடர்பாக உத்தரப்பிரதேச மாநில துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக் கூறுகையில் “இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராணி அவந்தி பாய் லோதி அரசு மருத்துவக் கல்லூரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.