இந்தியா

கேரளா: சமூகவலைதளங்களில் சிறுவர்களின் பாலியல் வீடியோக்களைப் பகிர்ந்த 41 பேர் கைது

webteam

கேரளத்தில் சிறுவர்களின் பாலியல் துன்புறுத்தல் வீடியோக்களை டெலகிராம், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்துவந்த தொழில்நுட்ப நிபுணர் உள்பட பல மாவட்டங்களைச் சேர்ந்த 41 பேர் காவல்துறையினரால் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இணையதளம் வழியாக குழந்தை பாலியல் துன்புறுத்தல் வீடியோக்களைப் பார்த்தல், அதனைப் பகிர்தல் தொடர்பாக மாநிலம் முழுவதும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நாட்களில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுவதாக கேரள காவல்துறையினர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டனர்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சைபர் க்ரைம் குழுவினர் நோய்த் தொற்று காலத்தில் வெர்ச்சுவல் டிரெண்ட்டுகள் பற்றி ஆராய்ந்தனர். அப்போது குழந்தை பாலியல் துன்புறுத்தல் வீடியோக்கள் பகிரப்படுவது பற்றிய தகவல் தெரியவந்தது.

"இந்தக் குற்றவாளிகளைத் தடுக்க நாங்கள் முயற்சி செய்தோம். அதில் பெரும்பாலானவர்கள் ஐடி துறையில் பணியாற்றினார்கள். தனித்துவமான மென்பொருள்கள் மூலம் அவர்களுடைய ஐபி முகவரிகளைச் சேகரித்தோம். பின்னர் பல சமூகவலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்தவர்களையும் டிராக் செய்தோம்" என்கிறார் கேரள காவல்துறை சைபர்டோம் ஏடிஜிபி மனோஜ் ஆப்ரஹாம்.

காவல்துறையினரின் நூதன விசாரணையில் வீடியோக்களைப் பகிர்ந்துவந்த டெலகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் குழுக்கள் கண்டறியப்பட்டன. சக்கா, பிக்மெலான், கோல்டு கார்டன், தேவதா, இன்செஸ்ட் லவ்வர்ஸ் உள்ளிட்ட பல பெயர்களில் அவர்கள் குழுக்களை நடத்திவந்துள்ளார்கள். அவற்றில் 400 பேர் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். மாவட்டங்கள் முழுவதும் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் இந்த சைபர் குற்றம் கண்டறியப்பட்டுள்ளது.