கேரளத் திரையரங்கு ஒன்றில் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், திரையரங்க உரிமையாளரை போலீசார் போஸ்கோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் கடந்த ஏப்ரல் 18ம் தேதி மலப்புரம், எடப்பால் பகுதியில் உள்ள சினிமா திரையரங்கில் நிகழ்ந்துள்ளது. சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தது, திரையரங்கில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. அந்த காமிரா பதிவில், 60 வயதுடைய மொய்தீன் குட்டி பட்டாம்பி என்ற தொழிலதிபர், சிறுமி மற்றும் தாய்க்கு ஒரே நேரத்தில் பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளது தெரியவந்தது. தாயின் அனுமதியோடு சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளது. சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் நடக்கும் போது தாய் ஆட்சேபனை எதுவும் செய்யவில்லை. சிறுமிக்கும், தாய்க்கும் நடுவில் திரையரங்கில் மொய்தீன் குட்டி அமர்ந்துள்ளார்.
சம்பவம் நடந்த மறுநாளே திரையரங்க உரிமையாளர் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வழங்கியுள்ளார். அந்தப் பதிவுகளை ஆய்வு செய்த அதிகாரிகள் சங்கரம்குளம் காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைந்துள்ளனர். ஆனால், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், குழந்தைகள் நல அதிகாரிகள் மே 12ம் தேதி மறைக்கப்பட்ட காட்சிகளை கேரள ஊடகத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால், இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் திரையரங்க உரிமையாளர் சதீஷை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு குழந்தைகள் நல அமைப்பும், பெண்கள் ஆணையமும் கண்டனம் தெரிவித்துள்ளது.
குழந்தை நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் கூறுகையில், “தங்களுடைய தவறை மறைக்கும் பொருட்டு இப்படியொரு பழிவாங்கும் நடவடிக்கையை எடுத்துள்ளார்கள். சம்பவம் நடந்த மறுநாளே திரையரங்க உரிமையாளர் தகவல் தெரிவித்துவிட்டார். கண்காணிப்பு கேமிரா காட்சிகளை தொழில்நுட்ப ரீதியாக சரிசெய்து கொடுப்பதில் தாமதமானதால் ஏப்ரல் 25 தேதி எங்களிடம் கொடுத்தார்கள். உடனடியாக நாங்கள் போலீசிடம் ஒப்படைந்தோம். எங்களிடம் தெரிவிக்கவில்லை என்று திரையரங்க உரிமையாளர் மீது போலீசார் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளிடம் அவர் உடனடியாக கூறியுள்ளார். போஸ்கோ சட்டம் குறித்த அறியாமையால் தான் போலீசில் முதலில் தெரிவிக்காமல் குழந்தைகள் நல அமைப்பிடம் தகவலை கூறியுள்ளார்.
குழந்தை சம்பத்தப்பட்டுள்ளதால் இது மிகவும் முக்கியமான வழக்கு. நம் எல்லோருக்கும் தெரியும் போலீசிடம் தொடர்பு கொள்வதில் மக்களுக்கு நிறைய சிக்கல்கள் இருப்பது என்பது. சம்பவம் குறித்து தாமதமாக தகவல் தெரிவித்தார் என்பதற்காக கைது செய்யத் தேவையில்லை” என்றார்.
அந்த வீடியோ பதிவுகள் குறித்து கூறுகையில், “அது 3 மணி நேர வீடியோ. நாங்கள் முழு வீடியோவையும் ஆய்வு செய்துவிட்டோம். தொழிலதிபர் மொய்தீன் ஒரே நேரத்தில் தாய் மற்றும் சிறுமி இருவரையும் பாலியல் ரீதியாக சீண்டிக் கொண்டிருந்தார். படம் தொடங்கியதில் இருந்து இறுதிவரை இப்படியே நிகழ்ந்தது. இடைவெளியின் போது நிறுத்தியவர் மீண்டும் வந்து பாலியல் சீண்டலை தொடர்ந்தார். போலீசிடம் தகவல் தெரிவித்த நாள் தோறும் சென்று அவர்களிடம் விசாரித்து வந்தோம். ஆனால், அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை” என்றார் அன்வர்.
திரையரங்க உரிமையாளர் காட்சிப் பதிவுகளை லீக் செய்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “போலீஸ் நடவடிக்கை எடுக்க மறுத்ததால் தான், குழந்தைகள் நல அமைப்பானது குறிப்பிட்ட சில காட்சிகளை மட்டும் சேனல்களில் வெளியிட்டது. இருப்பினும் அந்தக் காட்சிகளை வெளியிடுவதற்கு முன்பு குழந்தை மற்றும் தாயின் முகத்தை மறைத்து தான் வெளியிட்டோம். பின்னர், ஒட்டுமொத்த பதிவுகளையும் போலீசிடம் ஒப்படைத்துவிட்டோம். சில வழக்குகளில் போலீஸே காட்சிகளை லீக் செய்து இருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தில் திரையரங்க ஊழியர் தான் காட்சிகளை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.