வடமாநிலங்களில், தமிழக முதல்வர் விஜய்யின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி கும்பல் ஒன்று பெரிய அளவில் சைபர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளது. “நாங்கள் விஜய் ஆளுங்க, அறக்கட்டளையில் வேலை செய்கிறோம்” என நம்பவைத்து, வங்கிக் கணக்கு திறப்பு, ஸ்டார்ட்அப், கல்விக் கடன், வெளிநாட்டு படிப்பு உதவி என்ற பெயரில் ரூ.1,000 முதல் 50,000 வரை சரிபார்ப்புக் கட்டணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முதல்வர் விஜய் நடிகராகப் பரிச்சயமானவர் என்பதால், முதல்வராக அவர் செய்யும் செயல்களும், அவர் செய்த செயல்களும் இணையத்தில் சட்டென வைரலாகி விடுகின்றன. வட மாநிலங்களில் விஜய் குறித்து பொய்யான தகவல்களைப் பரப்பி, இன்புளுயன்ஸர்கள் பணம் சம்பாதிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனைப் பயன்படுத்தி, மத்தியப் பிரதேசப் பகுதிகளில் முதல்வர் விஜய்யின் பெயரைப் பயன்படுத்தி பொதுமக்களிடம் ஒரு கும்பல் பண மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
விஜய் தனது சொந்த பணத்தை ஏழை மக்களுக்கு அதிகளவில் செலவழித்து வருவதாகவும், இதுகுறித்து வட மாநிலங்களில் இன்புளுயன்ஸர்கள் மூலம் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் பகுதிகளில் விளிம்பு நிலையில் இருக்கும் பொதுமக்களைத் தொலைபேசியில் அழைத்த கும்பல், “நாங்கள் முதல்வர் விஜய்யின் ஆட்கள்.
விஜய்யின் பெயரில் நடத்தப்படும் அறக்கட்டளையில் பணிபுரிகிறோம். ஏழை மக்களுக்கு உதவுவதே எங்களின் நோக்கம். வங்கிக் கணக்குகளைத் திறந்து தருவதாகவும், ஸ்டார்ட்அப்கள் மற்றும் வணிகங்களை அமைக்க உதவுவதாகவும், கல்விக் கடன்கள், வெளிநாட்டில் படிப்பதற்கான நிதியுதவி போன்றவற்றைச் செய்து வருகிறோம்” எனக் கூறியதாகத் தெரிகிறது. மேலும், “உங்களுக்கு உதவி வேண்டுமானால், முதலில் சரிபார்ப்புக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்” எனக் கூறி, ரூ.1,000 முதல் ரூ.50,000 வரை பணத்தைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், நீண்ட நாட்கள் ஆகியும் எந்த அழைப்பும் வராததால், பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையின் உதவியை நாடியுள்ளனர்.
இதுதொடர்பாக அடுத்தடுத்து புகார்கள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, காவல்துறை அந்தத் தொலைபேசி எண்களை ஆய்வு செய்ததில், இது ஒரு சைபர் மோசடி என்பது தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வரின் பெயர் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இந்த விசாரணையில் தமிழக காவல்துறையும் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வரின் பெயரைப் பயன்படுத்தி மோசடி நடைபெற்றிருப்பதாக வெளியாகியுள்ள தகவல், பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
செய்தியாளர் - ராஜ்குமார்.ர