இந்தியா

ஆந்திர நதிகளை இணைக்கும் போலாவரம் திட்டம் - முதல்வர் ஜெகன் உத்தரவு

webteam

ஆந்திர நதிகளை இணைக்கும் போலாவரம் திட்டத்தை விரைந்து முடிக்க அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் பாயும் கோதாவரி, கிருஷ்ணா உள்ளிட்ட நதிநீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்க மேற்கு கோதாவரியில் புதிய அணை கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி இத்திட்டம் குறித்து அதிகாரிகளுடன் அமராவதியில் ஆலோசனை நடத்தினார். 

அப்போது இத்திட்டத்திற்காக மாநில அரசு 11 ஆயிரத்து 537 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாகவும் மத்திய அரசு தரப்பிலிருந்து நான்காயிரத்து 810 கோடி ரூபாய் நிதி வரவேண்டியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த திட்டத்துக்குத் தேவையான கட்டட பணிகளுக்கு முழுமையாக நிறைவேற்ற 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தேவைப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டறிந்த ஜெகன்மோகன் ரெட்டி, விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் போலாவரத் திட்டத்தை குறைவான செலவில் விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.