மகாராஷ்டிர அரசு தொடக்கப் பள்ளிகளில் ஹிந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக கற்பிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு அம்மாநிலத்தின் மொழி ஆலோசனைக் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மகராஷ்டிர அரசால் நியமிக்கப்பட்ட மொழி ஆலோசனைக் குழு, முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஹிந்தி கற்பிப்பதை கட்டாயமாக்கும் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியுள்ளது.
மாநில அரசு பள்ளிகளில் மராத்தியும் ஆங்கிலமும் கற்பிக்கப்படுவதே மோசமாக உள்ள நிலையில் கட்டாய மூன்றாம் மொழியாக ஹிந்தியைக் கற்பிப்பது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேவையற்ற சுமையை ஏற்படுத்தும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையின்படியே கட்டாய மூன்றாம் மொழியாக ஹிந்தி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் ஃபட்னவிஸ் விளக்கம் அளித்துள்ளார். மேலும், ஒரு பள்ளியைச் சேர்ந்த 20க்கு மேற்பட்ட மாணவர்கள் விரும்பினால் ஹிந்திக்கு பதிலாக வேறொரு இந்திய மொழி மூன்றாம் மொழியாகக் கற்பிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.
மகராஷ்டிராவில் ஹிந்தியை கட்டாய மொழியாக கற்பிப்பதற்கு காங்கிரஸ், சிவசேனை உத்தவ் தாக்ரே பிரிவு, மகாராஷ்ட்ர நவநிர்மாண் சேனை உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.