சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க, அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று சென்றனர். அவர்களை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. சிபிஐ அதிகாரிகளை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து சிபிஐ அதிகாரிகளை வைத்து மத்திய பாஜக அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்குவதாகக்கூறி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாட சிபிஐ முடிவு செய்துள்ளதாக அதன் இடைக்கால இயக்குநர் நாகேஷ்வர ராவ் தெரிவித்தார். அதன்படி சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.
இம்மனுவில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த மேற்கு வங்க காவல்துறை ஒத்துழைப்பு அளிக்காமல் அனுமதி மறுப்பதாகவும், அவரை விசாரணைக்கு ஒத்துழைக்க உத்தரவிட வேண்டுமென்றும் சிபிஐ குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் நிதி நிறுவன மோசடி வழக்கில் காவல் ஆணையருக்கு எதிரான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அவருக்கான ஆதாரங்கள் வலுவாக இருந்தால் காவல் ஆணையர் வருந்தும் அளவுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.