உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்! முகநூல்
இந்தியா

”நாடாளுமன்றத்தை விட அரசியல் சாசனம்தான் மிக உயர்ந்தது” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்!

அரசியல் சாசனம்தான் மிக உயர்ந்தது என்றும், ஜனநாயகத்தின் 3 பிரிவுகளும் அதன் கீழ் செயல்படுகின்றன என்றும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளநிலையில், இவரின் கருத்து கவனத்தை பெற்றுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

கடந்த மாதம் நாட்டின் 52வது தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற நீதிபதி கவாய், தனது சொந்த ஊரான மகாராஷ்டிராவின் அமராவதி நகரில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்திய அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது என்றும் ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் அதன் கீழேயே செயல்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதுகுறித்து அவர் பேசுகையில், “ நாடாளுமன்றம் மிக உயர்ந்தது என்று பலர் கூறினாலும், நம்பினாலும் என்னை பொறுத்தவரை இந்திய அரசியலைப்புச் சட்டம்தான் மிக உயர்ந்தது. ஜனநாயகத்தின் மூன்று பிரிவுகளும் அரசியலமைப்பிம் கீழ் செயல்படுகின்றன.

ஜனநாயகத்தின் எந்தப்பிரிவும் நிர்வாகம், சட்டத்துறை, நீதித்துறை என இதில் எது உயர்ந்தது என்ற விவாதம் எப்போதும் உள்ளது . ஆனால், அரசியலமைப்பு எல்லாவற்றிக்கும் மேலானது.

அரசுக்கு எதிராக உத்தரவுகளைப் பிறப்பிப்பதன் மூலம் மட்டுமே ஒரு நீதிபதி சுதந்திரமானவர் ஆகிவிட முடியாது. ஒரு நீதிபதிக்கு எப்போதும் ஒரு கடமையுணர்வு இருக்க வேண்டும். ஒரு நீதிபதி என்பவர் பொதுமக்களின் உரிமைகள், அரசியலமைப்பு விவகாரம் மற்றும் கோட்பாடுகளின் பாதுகாவலர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நமக்கு அதிகாரம் மட்டுமல்ல, ஒரு கடமையும் உள்ளது என்பதை நீதிபதிகள் நினைவில் கொள்ள வேண்டும்.

நாம் கொடுக்கும் தீர்ப்பு குறித்து மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு ஒரு நீதிபதி செயல்படக்கூடாது. நாம் சுதந்திரமாகச் சிந்திக்க வேண்டும். மக்கள் என்ன சொல்வார்கள் என்பது நமது முடிவெடுக்கும் முறையின் ஒரு பகுதியாக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. நான் தனிப்பட்ட முறையில் அரசியலமைப்பில் உள்ள அடிப்படை உரிமைகளை எப்போதும் நிலைநிறுத்தியுள்ளேன். எனது தீர்ப்புகள் மற்றும் பணி இதைக் காட்டும்.எனது தந்தை ஒரு வழக்கறிஞராக ஆக விரும்பினார், ஆனால் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டதால் அது முடியாமல் போனது" என்றார்.