இந்தியா

இந்திராணி முகர்ஜியிடம் ப.சிதம்பரம் ரூ.10 லட்சம் கேட்டார் - சிபிஐ குற்றப்பத்திரிகை

webteam

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது மகனின் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக, 10 லட்சம் ரூபாய் அனுப்புமாறு இந்திராணி முகர்ஜி தம்பதியிடம் கேட்டதாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2 ஆயிரம் பக்கத்திற்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவர் மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பீட்டர் முகர்ஜி முதல் குற்றவாளியாகவும், கார்த்தி 2வது குற்றவாளியாகவும், ப. சிதம்பரம் 4வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜி டெல்லியில் உள்ள‌ விடுதியில் தங்கி, சிதம்பரத்தை பார்க்கச் சென்றபோது விடுதியின் காரை பயன்படுத்தியதற்கான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது. 

மேலும், இந்திராணியும் பீட்டர் முகர்ஜியும் தங்கள் நிறுவனத்திற்கு அந்நிய நேரடி முதலீடு பெறுவதற்கு அனுமதி பெற சிதம்பரத்தை அவரின் அலுவலகத்திற்குச் சென்று பார்த்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது, சிதம்பரம் அந்நிய நேரடி முதலீடு பெற ஒப்புதல் அளிக்க தனது மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்திற்கு‌ பண உதவி செய்யக் கூறியதாகவும், அதன்படி 9 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் அவரது நிறுவனத்தின் கணக்கிற்கு கைமாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தனது பதவியையும், அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தியதால் அரசின் கருவூலத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றப்பத்திரிகையில் சிபிஐ தெரிவித்துள்ளது.