இந்தியா

வெங்காய விலைக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்: சிதம்பரம் பங்கேற்பு

webteam

குளிர்காலக் கூட்டத்தொடரில் பங்கேற்க ப.சிதம்பரம் நாடாளுமன்றம் வருகை தந்தார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21--ஆம் தேதி முன்னாள் நிதி‌ அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. அதனை அடுத்து திகார் சிறையில் சிதம்பரம் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி சிபிஐ தொடர்ந்த முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம் சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது. 

ஆனால் அதற்கு முன்பாகவே, அதாவது அக்டோபர் 16-ஆம் தேதி இதே வழக்கில் அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்தது. இதனால் அவர் சிறையிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கிலும் ப.சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து 106 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வெளியே வந்தார். சிறையிலிருந்து வெளிவந்த அவர் தனது மகன் கார்த்தி சிதம்பரத்துடன் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். 

இந்நிலையில் 106 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க இன்று அவர் வந்தார். காங்கிரஸ் எம்.பி.கள் வெங்காய விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு போராட்டம் நடத்தினர். அதில் ப. சிதம்பரமும் கலந்துண்டார்.