ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அத்துடன் தன்னை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அளிக்கப்பட்ட அனுமதியை எதிர்த்தும் சிதம்பரம் புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.
அப்போது சிதம்பரத்தின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சிபிஐ ஏற்கெனவே கைது செய்துவிட்டதால் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜாமீன் கோரி ப.சிதம்பரம் கீழமை நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.