model image x page
இந்தியா

சத்தீஸ்கர் | அடக்கம் செய்வதில் வெடித்த வன்முறை.. கிறிஸ்தவ தேவாலயம், வீடுகள் எரிப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கிராம் ஒன்றில் அடக்கம் செய்வது தொடர்பான தகராறில், வன்முறை வெடித்ததில் அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயங்களும் சில வீடுகளும் எரிக்கப்பட்டன.

Prakash J

சத்தீஸ்கர் மாநிலத்தின் மத்தியப் பகுதியில் காங்கேர் மாவட்டத்தில் படேதேவ்டா என்ற கிராம் உள்ளது. இக்கிராமத்தில், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒருவரின் தந்தை இறந்துள்ளார். அவரது உடலை அடக்கம் செய்வதற்கு உள்ளூர் கிராம மக்களும் இந்து அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அக்கிராமத்தில் வன்முறை வெடித்தது.

உள்ளூர் கிராமத் தலைவரான (சர்பஞ்ச்) ராஜமன் சலாம் (36) என்பவர், பல ஆண்டுகளுக்கு முன்பே கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார். இந்த நிலையில், அவருடைய 70 வயதான தந்தை சம்ரா ராம் சலாம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

Chhattisgarh

உள்ளூர் இந்து பழக்கவழக்கங்களின்படி தனது தந்தையின் உடலை தகனம் செய்ய முதலில் அவர் முயன்றுள்ளார். ஆனால், அவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவ்வாறு செய்ய இந்து மதத்தினர் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர், குடும்பத்தினர் கிறிஸ்தவ சடங்குகளின்படி ஒரு தனியார் நிலத்தில் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்தனர். இந்த அடக்கத்திற்கு உள்ளூர்வாசிகள் எதிர்ப்பு தெரிவிக்க அது வாக்குவாதமாகத் தொடங்கி பின்னர் வன்முறையாக மாறியுள்ளது. மோதல்கள் வெடித்ததைத் தொடர்ந்து அடக்கம் செய்வது நிறுத்தப்பட்டதாகவும், இதில் தனது உறவினர்கள் பலர் காயமடைந்ததாகவும் பாதிக்கப்பட்டவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சில கிராம மக்கள் மரணத்தின் சூழ்நிலைகள் குறித்து சந்தேகம் எழுப்பியதாகவும், பாரம்பரிய பழங்குடியின வழக்கங்களைப் பின்பற்றவில்லை என்ற அடிப்படையில் அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. புகார்களைத் தொடர்ந்து, ஒரு நிர்வாக தலைவர் டிசம்பர் 18 அன்று பிரேதப் பரிசோதனைக்காக உடலைத் தோண்டி எடுக்க உத்தரவிட்டுள்ளார். அந்தச் சடலம் தோண்டி எடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, கும்பல் ஒன்று, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டிற்குத் தீ வைத்துள்ளது. தவிர, தேவாலயங்களைச் சேதப்படுத்தியது மற்றும் ஒரு பிரார்த்தனைக் கூடத்தை எரித்துள்ளது.

தவிர, தடிகளாலும் பாரம்பரிய ஆயுதங்களாலும் ஆயுதம் ஏந்திய குழுக்கள், காவல்துறையினர் முன்னிலையிலேயே அவர்களைத் தாக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க காவல்துறையினரும் நீதித்துறை அதிகாரிகளும் தலையிட்டபோது, ​​அவர்கள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஒரு மூத்த அதிகாரி உட்பட 20-க்கும் மேற்பட்ட காவல்துறை வீரர்கள் காயமடைந்து மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு கிறிஸ்தவ அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.