ஃபேஸ்புக்கில் பழங்குடி மக்கள் குறித்து அவதூறாக பதிவிட்டதாக பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 21 அன்று, சத்தீஸ்கரில் உள்ள சுக்மா மாவட்ட வனப்பகுதியில், மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் 17 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மனிஷ் சோனி என்ற பத்திரிகையாளர், கொல்லப்பட்ட பாதுகாப்புப் படையினரின் புகைப்படங்களை தனது ஃபேஸ்புக் ஐடியில் இந்தியில் ஒரு கருத்துடன் பகிர்ந்துள்ளார்.
‘’இதோ பாருங்கள். இறந்தவர்கள் மற்றும் கொலையாளிகளின் சாதிப் பின்னணி ஒரே மாதிரியாக இருக்கும். இப்போது கொலைகளுக்குப் பின்னால் உள்ளவர்களைப் புரிந்து கொள்ளுங்கள், அதற்கான பதில்களை நீங்கள் காணலாம். அவர்களை தியாகிகள் என்று அழைக்கவும், அவர்களுக்கு வணக்கம் செலுத்தவும், அடுத்த சம்பவத்திற்காக காத்திருக்கவும். பழங்குடியினர் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதன் மூலம் மட்டுமே காட்டை ஆக்கிரமிக்க முடியும்’’ என்று பகிர்ந்துள்ளார்.
சோனியின் இந்த சர்ச்சைக்குரிய பதிவு, பழங்குடி சமூகத்தினரை இழிவுபடுத்துவதாகவும், அவர்கள் மீது வெறுப்பு பிரச்சாரத்தை ஏற்படுத்துவதாகவும் பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் எழுந்தன.
இதையடுத்து மனிஷ் சோனி மீது காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.