solar energy tv  x - CREDA
இந்தியா

21 ஆண்டுகள்.. TVயே பார்க்காத மக்கள்.. சவாலைச் சந்தித்து சாதித்த கிராமம்!

21 ஆண்டுகளாகத் தொலைக்காட்சியைப் பார்க்காத சத்தீஸ்கர் மலைக்கிராம மக்களுக்கு, தற்போது சோலார் தொலைக்காட்சி மூலம் வெளி உலகைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

PT WEB

செய்தியாளர்: வெற்றிச்செல்வி

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தொலைக்காட்சி என்பது தவிர்க்க முடியாத ஒரு சாதனமாக மாறிவிட்டது. ஆனால், இந்தியாவில் ஒரு மலைக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு அப்படி ஒரு அனுபவமே கிடைத்ததில்லை. தற்போது அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

Lawa Village childrens watching tv

சத்தீஸ்கர் மாநிலத்தின் தந்தேவாடா மாவட்டம், தெற்கு பஸ்தர் பகுதியில் அமைந்துள்ளது லாவா என்ற பழங்குடியின கிராமம். பைலடிலா மலைத்தொடருக்குப் பின்னால், அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே இந்தக் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் 21 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றன. இங்கு செல்வதற்குப் போதிய சாலை வசதி கிடையாது. பாறைகளும் கரடுமுரடான பாதைகளும் நிறைந்த மலைப்பகுதியைக் கடந்துதான் கிராமத்தை அடைய முடியும். கிராமம் அமைந்துள்ள புரேங்கல் சுற்றுவட்டாரப் பகுதி பல ஆண்டுகளாக தீவிரவாதத்தின் தாக்கத்தையும் எதிர்கொண்டுள்ளது. இதனால் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கிராமத்துக்குச் சென்று மக்களைச் சந்திப்பதும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் சவாலாக இருந்ததாக சத்தீஸ்கர் அரசின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இந்நிலையில், பாதுகாப்புப் படையினரின் தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்குப் பிறகு அப்பகுதியில் பாதுகாப்புச் சூழல் மேம்பட்டுள்ளதாகவும், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கிராமத்துக்குச் சென்று மக்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

solar enery in village

இப்படி பல சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் லாவா கிராமத்துக்கு மற்றொரு பெரிய சவாலாக இருந்தது மின்சார வசதி. இந்தக் கிராமத்துக்கு வழக்கமான மின்சாரக் கட்டமைப்பு சென்றடையவில்லை. இதனால் தொலைக்காட்சி போன்ற வசதிகளும் மக்களுக்குக் கிடைக்காமல் இருந்தது. நம்முடைய வீடுகளில் இயங்கும் தொலைக்காட்சியும், இந்த மலைக்கிராம மக்களுக்கு எட்டாத ஒன்றாகவே இருந்தது.

இந்த நிலையில்தான், அந்த மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும், சத்தீஸ்கர் மாநில புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையான CREDA-வும் இணைந்து, கிராம மக்களின் பொதுப் பயன்பாட்டுக்காக சோலார் தொலைக்காட்சியை நிறுவியுள்ளன. வழக்கமான மின்சாரக் கட்டமைப்பு இல்லாததால், சூரிய சக்தியைப் பயன்படுத்தி இந்தத் தொலைக்காட்சி இயங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இனி கிராம மக்கள் நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்ளவும், அரசு நலத்திட்டங்கள் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ளவும், வாய்ப்பு கிடைத்துள்ளது.

இது ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்கப்பட்ட தொலைக்காட்சி திட்டம் அல்ல. 21 குடும்பங்களும் ஒன்றாக அமர்ந்து பார்க்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள பொதுப் பயன்பாட்டுத் தொலைக்காட்சி வசதி. ஒரு சிறிய தொலைக்காட்சித் திரைதான் என்றாலும், இந்தக் கிராம மக்களுக்கு அது வெளி உலகத்துடன் தொடர்புகொள்வதற்கான ஒரு தொடக்கமாக மாறி இருக்கிறது.

இந்த முயற்சி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணு தேவ் சாய், பஸ்தர் பகுதியின் தொலைதூரக் கிராமங்களுக்கும் வளர்ச்சி, கல்வி மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டுசேர்ப்பது மாநில அரசின் முன்னுரிமை என்று தெரிவித்துள்ளார்.