இந்தியா

சத்தீஸ்கர் மாநிலத்தில் உயர்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு !

சத்தீஸ்கர் மாநிலத்தில் உயர்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு !

webteam

சத்தீஸ்கர் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு 72% சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நேற்று அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் தேசிய கொடியை ஏற்றினார். அதன்பின்னர் இவர் சுதந்திர தின உரையாற்றினார். அப்போது அவர், “நமது மாநிலத்தில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியவர்கள் தங்களின் இடஒதுக்கீட்டை அதிக படுத்துமாறு கோரிக்கையை விடுத்து வந்தனர். ஆகவே இன்று நான் ஒரு முக்கிய அறிவிப்பை விடுக்கிறேன். 

அதன்படி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஏற்கெனவே இருந்த 14 சதவிகித இடஒதுக்கீடு இனி 27சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் பட்டியலினத்தவர்களுக்கு இருந்த 12 சதவிகித இடஒதுக்கீடு இனி 13 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பழங்குடியினருக்கு 32 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்கப்படவுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் கொடுத்திருக்கும் உரிமையை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. ஆகவே தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். 

சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்தப் புதிய இடஒதுக்கீடு அமலுக்கு வந்தால் இது நாட்டிலேயே மிகவும் அதிகமான இடஒதுக்கீடு ஆகும். அதாவது சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்தப் புதிய இடஒதுக்கீட்டின்படி மொத்தமாக 72% சதவிகிதம் இடம் ஒதுக்கப்பட்டவுள்ளது. இது தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் 69% இடஒதுக்கீட்டை விட அதிகமாகிவிடும். மேலும் இந்த முடிவு உச்சநீதிமன்றத்தின் 50 சதவிகித இடஒதுக்கீடு என்ற விதியை மீறும் விதத்தில் உள்ளதால் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.