சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் பாஜக எம்.எல்.ஏ உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கரின் பஸ்டார் மாவட்டத்தில் உள்ள தண்டேவாடே தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ பீம மந்தவி. தன்னுடைய பாதுகாவலர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் பசேலி பகுதியில் இருந்து குவகொண்டாவை நோக்கி பீம மந்தவி வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் துப்பாக்கிச் சூடு தாக்குதலும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மாவோயிஸ்ட்டுகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் பாஜக எம்.எல்.ஏ உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இதில், மூன்று பாதுகாவலர்கள் மற்றும் டிரைவரும் பலியாகினர். இந்தத் தாக்குதலை அடுத்து உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்திற்கு முதலமைச்சர் புபேஸ் பாகெல் அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 11ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக 2013ம் ஆண்டு பாஸ்டர் மாவட்டத்திலுள்ள ஜீரம் காதி பகுதியில் காங்கிரஸ் தலைவரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.