சட்டீஸ்கர் மாநிலத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசிரமம் நடத்தி வரும் 70 வயது சாமியார் சிக்கியுள்ளார்.
பிலாஸ்பூர் பகுதியில் ஆசிரமம் நடத்தி வரும் பிரபனசார்யா பலஹரி மகாராஜ் என்ற சாமியார் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 21 வயதுமிக்க இளம்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆல்வார் பகுதியில் உள்ள ஆசிரமத்தில் சாமியார் மகாராஜ் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக இளம்பெண் தனது புகாரில் குற்றம்சாட்டியுள்ளார்.
இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அரவலி காவல்துறை அதிகாரி தெரிவித்தார். மேலும், புகார் தொடர்பாக விசாரிப்பதற்காக போலீசார் ஆசிரமம் சென்றபோது சாமியார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. மருத்துவர்களின் அனுமதியுடன் சாமியாரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், “சட்ட படிப்பை முடித்த அந்த இளம்பெண் இண்டன்ஷிப் செய்து வந்தார். சாமியார் மகாராஜ் பாதிக்கப்பட்ட இளம்பெண் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி நன்கொடை கொடுப்பதற்காக சாமியாரின் ஆசிரமத்திற்கு அவர் சென்றுள்ளார். அப்போது சாமியார் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கலாம்” என்று தெரிய வந்துள்ளது.
முன்னதாக, பக்தர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக சாமியார் குர்மீத் ராம் ரஹீம் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு சிறையில் உள்ளார். அதேபோல், பல்வேறு சாமியார்கள் மீது பாலியல் வன்கொடுமை புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.