இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-வது சட்டப்பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு, பாஜக தலைமையிலான மத்திய அரசு, இந்த சட்டப்பிரிவை ரத்து செய்ததுடன், ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதையடுத்து, சமீபத்தில் ஜம்மு - காஷ்மீருக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்றது. ஜம்மு - காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்றார். இந்த நிலையில், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) பகுதிக்கு அருகே 14,300 அடி உயரத்தில் அமைந்துள்ள பாங்காங் ஏரிக் கரையில் சத்ரபதி சிவாஜியின் சிலையை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது.
கடந்த டிசம்பர் 26ஆம் தேதி இந்தச் சிலை திறக்கப்பட்ட நாள்முதலே, உள்ளூர் மக்களிடையே இதுதொடர்பாக விவாதம் எழுந்து வருகிறது. ஒருவகையில் இந்தச் சிலைக்குப் பாராட்டுகள் குவிந்தாலும் மறுபுறம், லடாக்கின் பாரம்பரியம், சூழலியல் மற்றும் உள்ளூர் மக்களின் கருத்துகளைக் கேட்காமல் சிலை நிறுவப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாராட்டிய யூனிட்டில் பணிபுரிபவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் அளித்த நிதியின் மூலம், அந்த யூனிட் அமைந்துள்ள பகுதியிலேயே சிவாஜி சிலை நிறுவப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், சிலை நிறுவ இந்த இடம் சரியானதா என்ற கேள்வியையும் சிலர் முன்வைக்கின்றனர்.
சிவாஜி சிலை தொடர்பாக லடாக் கவுன்சிலர் கோன்சோக் ஸ்டான்ஸின் (Konchok Stanzin), “பாங்காங்கில் நிறுவப்பட்டுள்ள சிலை குறித்து உள்ளூர்வாசியாக குரல் எழுப்புகிறேன். உள்ளூர் மக்களின் கருத்துகளைக் கேட்காமல் சிவாஜி நிலை எழுப்பப்பட்டுள்ளது.
சிலை வைக்கப்பட்டதில் லடாக்கின் தனித்துவமான கலாசாரத்துக்கும் சூழலுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? இயற்கையை பிரதிபலிக்கும் வகையிலான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
அரசியல் ஆர்வலர் சஜ்ஜாத் கார்கிலி, “லடாக்கில் நிறுவப்பட்டுள்ள சிவாஜி சிலை, லடாக்குடன் வரலாற்றுரீதியாகவோ கலாசார ரீதியாகவோ தொடர்பற்றதாக உள்ளது. சத்ரபதி சிவாஜியின் பெருமைகளை நாங்கள் மதிக்கிறோம். எனினும் பொருத்தமற்ற இடத்தில் கலாசார சின்னங்கள் புகுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.