இந்தியாவில் நெகிழிக் கழிவுகள் அதிகம் வீசி எறியப்படும் கடற்கரைகளில் ஒன்றாக சென்னை எலியட்ஸ் கடற்கரை திகழ்வதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது கடற்கரைதான். மெரினா, எலியட்ஸ், திருவான்மியூர், கோவளம் என அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப கடற்கரை பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது. இதில் மெரினா கடற்கரையும், எலியட்ஸ் எனப்படும் பெசண்ட் நகர் கடற்கரையும் அதிகம் மக்கள் கூடும் இடங்கள். பண்டிகை நாட்கள், வார விடுமுறை நாட்களில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் இந்தக் கடற்கரைகளுக்கு மக்கள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் மெரினா கடற்கரையின் தூய்மைக்காக மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி கடைகளை சீர்படுத்த, மின்கோபுர விளக்குகள், சிசிடிவி கேமராக்கள் அமைத்தல் உள்ளிட்ட வேலைகளில் மாநகராட்சி இறங்கியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் நெகிழிக் கழிவுகள் அதிகம் வீசி எறியப்படும் கடற்கரைகளில் ஒன்றாக சென்னை எலியட்ஸ் கடற்கரை திகழ்வதாக மத்திய சுற்றுலாத்துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் பேசிய அவர், எலியட்ஸ் கடற்கரையை ஒட்டியுள்ள உணவகங்கள், சிறு கடைகள், மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து நெகிழிப் பை, நெகிழி கோப்பைகள் அதிகம் வீசியெறியப்படுவதாக தெரிவித்தார். சமீபத்திய ஆய்வுப்படி துறைமுக நகரங்கள், மீன்பிடி கிராமங்களிலும் அதிகளவில் நெகிழி கழிவுகள் வீசி எறியப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.