ஒடிசா ரயில் விபத்து
ஒடிசா ரயில் விபத்து புதிய தலைமுறை
இந்தியா

”எங்கு பார்த்தாலும் மரண ஓலம்; நாங்க உயிர் பிழைச்சதே இதனால்தான்” - நேரில் பார்த்த தமிழக பயணிகள்!

Prakash J

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று (ஜூன் 2) இரவு 7 மணி அளவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை. அதேநேரம் ரயில் விபத்திற்கான காரணம் குறித்து அறியப்பட்டு வருகிறது.

முதற்கட்ட தகவலின்படி, சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தனக்கு கிடைத்த சிக்னலில் ஏற்பட்ட பிரச்னையால் மெயின் லைனில் இருந்து லூப் லைனிற்கு செல்கிறது. லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது கோரமண்டல் மோதியுள்ளது. இந்த விபத்தில் கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் எதிர் திசையில் உள்ள மெயின் ட்ராக்கில் விழுந்துள்ளது. அந்த நேரத்தில் எதிரே ஹவுரா நோக்கி வந்து கொண்டிருந்த ஹவுரா எக்ஸ்பிரஸ், ஏற்கனவே விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இது முதற்கட்ட தகவல் மட்டுமே.

இந்த ரயில் விபத்தில், இதுவரை 230க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் ஒடிசாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், முதற்கட்டமாக, கோரமண்டல் ரயிலில் பயணித்தவர்களில் 50 பேர் ஒடிசாவிலிருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று சென்னை அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் புதிய தலைமுறைக்கு அளித்த சிறப்பு பேட்டியில், ”விபத்து நடந்தபோது விளக்குகள் அணைந்து அணைந்து எரிந்தன. பின்னர் மொத்தமாகவே அணைந்துபோய் விட்டன. அதன்பிறகு கருகும் புகை நாற்றம் அடிக்க ஆரம்பித்தது. இதனால், பயணிகளுக்கு அதிக பயம் வர ஆரம்பித்துவிட்டது. சிலர் ரயில் பெட்டிகளில் இருந்து தண்டவாளங்களில் தூக்கி வீசப்பட்டனர். விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து தெரியவில்லை. முதலில் கோரமண்டல் ரயில் சரக்கு ரயில் மீது மோதியுள்ளது. ஆனால், அடுத்து மற்றொரு பயணிகள் ரயிலும் மோதி விபத்து ஏற்பட்டதாகச் சொல்கின்றனர். ஆனால், அடுத்தடுத்து விபத்து நடந்ததால், பயணிகள் பயப்பட ஆரம்பித்தனர்” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் சிலர், “சரியாக 7 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டது. அப்போது மேலே இருந்த கேபிள்கள் அறுந்து விழ ஆரம்பித்தன. வண்டி நன்றாகக் குலுங்கியது. படுத்திருந்தவர்கள் எல்லாம் கீழே விழுந்தனர். ஏதோ சிறிய விபத்து என்று நினைத்தோம். ஆனால், வெளியில் வந்து பார்த்தபிறகுதான் பெரிய விபத்து என தெரிந்தது. விபத்து நடைபெற்ற இடத்தில் எங்கும் மரண ஓலம் கேட்டது. பயணித்தவர்களில் பலருக்கு கை, கால்கள் போய் அழுதுகொண்டிருந்தனர். நிறைய பேர் இறந்து போயிருந்தனர். அருகில் இருந்த கிராம மக்கள் உடனே ஓடிவந்து உதவி செய்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள்தான் பயங்கரமாக அழுதனர். ’எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள்’ என அவர்கள் கதறி அழுதனர்.

தொடர்ந்து அவர்கள், “சரியாக பாலசோரிலிருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொகான் என்ற இடத்தில்தான் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. அந்த இடத்தில் சரக்கு ரயில் முன்னே சென்று மாற்று தண்டவாளத்தில் நிற்க, அப்போது பின்னால் வந்த கோரமண்டல் ரயிலுக்கு சரியான சிக்னல் கிடைத்ததா எனத் தெரியவில்லை. இதன்காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கோரமண்டல் ரயில் ஓட்டுநர் போட்ட திடீர் பிரேக் காரணமாகவே நாங்கள் எல்லாம் இன்று உயிருடன் இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.