Mumbai IIT ANI
இந்தியா

ChatGPT சர்ச்சை.. மாணவர் மரணம்! பெற்றோர் சொன்ன பகீர் குற்றச்சாட்டு

ChatGPT பயன்பாடு சர்ச்சையில் தொடங்கி IIT Bombay மாணவர் மரணம் வரை நீண்ட விவகாரம்: சாதிப் பாகுபாடு, அழுத்தம் குற்றச்சாட்டில் சிக்கிய கல்லூரி நிர்வாகம்

PT WEB

செய்தியாளர் - M.மீரா

மும்பை ஐஐடி வளாகத்தில், எனர்ஜி சயின்ஸ் அண்டு இன்ஜினீயரிங் (Department of Energy Science and Engineering) துறையில் இரண்டாம் ஆண்டு படித்துவந்த சாஹில் வகோடே என்ற மாணவர், தேர்வின்போது செல்போனை பயன்படுத்தியதாகவும், தேர்வு வினாத்தாளை ChatGPT-ல் பதிவேற்றி அதற்கான பதில்களை பெற முயன்றதாகவும் IIT மும்பை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்த விவகாரம் குறித்து மாணவரிடம் தேர்வுக் கண்காணிப்பாளர் மற்றும் துறைத் தலைவர் பேசியதாகவும், அவருக்கு ஆலோசனை வழங்கியதுடன், இந்த சம்பவம் அவரது கல்வி வாழ்க்கையைப் பாதிக்காது என உறுதியளித்ததாகவும் நிர்வாகம் கூறியுள்ளது. மேலும், மாணவர் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

IIT Mumbai protest

இந்தச் சந்திப்புக்குப் பிறகு மாணவர் தனது விடுதி அறைக்குத் திரும்பியுள்ளார். பின்னர் நேற்று மாலை அவரது அறையில் அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர் மீது ஓர் ஆண்டு இடைநீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம் என அச்சுறுத்தப்பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். அதன் காரணமாக படிப்பு காலம் நீளும் வாய்ப்பும் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். எனினும், இந்தக் குற்றச்சாட்டுள் உறுதி செய்யப்படவில்லை.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவரின் பெற்றோர், கல்லூரி வளாகத்தில் சாதிப் பாகுபாடு மற்றும் பல்வேறு அழுத்தங்களை தங்கள் மகன் எதிர்கொண்டதாகவும் இதையடுத்து, படிப்பை முடித்த பிறகு எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்றும், பொறுமையாக இருக்குமாறும் பெற்றோர் அவருக்கு அறிவுறுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

IIT Mumbai Protest

பெற்றோரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஐஐடி மும்பையின் முன்னாள் மாணவர் நலன் துறை டீன் சூர்யநாராயண் துல்லா உள்ளிட்ட சில அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 108-ன் கீழ் தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.