இந்தியா

‘இது மதச்சார்பின்மை நாடு, உங்கள் மனநிலையை மாற்றுங்கள்’ - அதிகாரிகளை விளாசி தள்ளிய நீதிபதி

rajakannan

நம்முடையது மதச்சார்பின்மை நாடு என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

அரியானா மாநிலத்தை சேர்ந்த இந்து மத பெண், முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவருடன் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் தங்களது திருமணத்தை குர்கான் மாவட்ட திருமண அலுவலகத்தில் பதிவு செய்ய முயன்ற போது சிக்கல்கள் எழுந்துள்ளது. 

அதாவது, திருமணத்தை பதிவு செய்யும் போது விண்ணப்பத்தில் தங்களது நிரந்தர முகவரி என்ற இடத்தில் பெற்றோர்களின் முகவரியை அளிக்க வேண்டியிருந்தது. அதனால், அவர்களுக்கு சிக்கல் ஏற்படும் என்பதால், தங்களது தற்காலிக முகவரியை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால், அதிகாரிகள் ஏற்க மறுத்துள்ளதாக தெரிகிறது.

இதனையடுத்து, தங்களது மதத்தை மாற்றாமலேயே சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் தங்களது திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு அந்த ஜோடி பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளது. விசாரணையின் போது, ‘என்னுடைய பெற்றோர்கள் எங்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். திருமண பதிவில் தம்பதிகளுக்கான வழக்கமான முகவரி பரிசோதனை நடைமுறைகளை கடைபிடிக்கக் கூடாது. அப்படி செய்தால் எங்களது தனிப்பட்ட உரிமை பாதிக்கப்படும்’ என்று அந்த பெண் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் விளக்கம் அளித்த குர்கான் துணை கமிஷனர், எந்த அதிகாரியும் ஜோடிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று முகவரி சரிபார்க்கப்படும் என்று கூறவில்லை என்று கூறினார். அதற்கு, ‘திருமண அலுவலக அதிகாரி முன்னிலையில் ஜோடி அளித்த வீட்டு முகவரியை தான் கணக்கில் கொள்ள வேண்டும்’ என்று நீதிமன்றம் தெரிவித்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ராஜிவ் நரைன் ரெய்னா, ‘மாறியிருக்கும் காலநிலையில், மதச்சார்பின்மையை வெளிப்படுத்தும் வகையில் கலப்பு திருமணங்களை ஊக்குவிக்கும் நம்முடைய மனநிலை வெளிப்பட வேண்டும்’ என்று அதிகாரிகளுக்கு காட்டமாக தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, மாவட்ட திருமண அலுவலக அதிகாரிக்கு நீதிபதி அளித்துள்ள அறிவுரையில், “ஜோடிகளின் விண்ணப்பத்தில் நிரந்தர முகவரிக்கு பதிலாக தற்காலிக முகவரியை ஏற்றுக் கொள்ள வேண்டும். அட்வான்ஸ் நோட்டீஸை அவர்களது பெற்றோர்கள் இருக்கும் முகவரிக்கு அனுப்ப வேண்டாம். அவர்களின் தனிப்பட்ட உரிமை, வாழும் உரிமை, சுதந்திரம் ஆகியவற்றை கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.