இந்தியா முதன்முறையாக நிலவிற்கு சந்திராயன்-I விண்கலத்தை 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி அனுப்பியது. இந்த விண்கலம் நிலவின் தரைப்பகுதியிலிருந்து 100கிலோமீட்டர் உயரத்தில் சுற்றி வந்தது. இந்த விண்கலம் நிலவிலுள்ள சூழல்கள், கனிமங்கள் குறித்து ஆய்வு செய்தது.
இதனையடுத்து சந்திராயன்-I விண்கலம் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதன் ஆயுள் காலத்தை நிறைவு செய்தது. அதன்பின்னர் இந்தியா மீண்டும் நிலவிற்கு சந்திராயன்-II விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டது. அதன்படி வரும் ஜூலை மாதம் 9ஆம் தேதியிலிருந்து 16ஆம் தேதிக்குள் சந்திராயன்-II விண்ணில் ஏவப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்தது.
இந்நிலையில் புவி கண்காணிப்பை அதிகரிக்கும் வகையில் இஸ்ரோ தயாரித்த "ரிசாட்2பி" என்ற செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் இன்று ஏவப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், ''ஜூலை மாதம் 9ஆம் தேதியிலிருந்து 16ஆம் தேதிக்குள் சந்திராயன்-II விண்ணில் ஏவப்படும்.
சந்திராயன் 2 என்பது இந்திய விண்வெளித்துறையின் மைல்கல்லாக அமையும். இந்த திட்டமானது ISROக்கு சவாலான ஒன்று தான். இந்த விண்கலம் தரையிறங்கும் இடமானது இதுவரை எந்த நாடும் தொடாத இடமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். ரூ.800 கோடி செலவில் சந்திராயன் 2 திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
சந்திராயன்-II பூமியிலிருந்து ஏவப்பட்டவுடன் ஆர்பிடர் ப்ரோபல்ஷன் மூலம் நிலவை சென்றடையும். அதன் பின்னர் லண்டர் மற்றும் ரோவர் தனியாக பிரிந்து, லண்டர் நிலவின் தென் துருவத்திலுள்ள தரைப்பகுதியில் இறங்கும். நிலவில் இறங்கிய பிறகு ரோவர் பல ஆய்வுகளை நடத்தவுள்ளது
இந்தியாவின் எதிர்கால திட்டமான விண்வெளிக்கு ஆட்களை அனுப்புவது குறித்து கடந்த ஜனவரியில் பேசிய சிவன், விண்வெளிக்கு செல்வதில் பெண் விண்வெளி வீரர்களின் பங்களிப்பும் இருக்க வேண்டுமென்றும் தெரிவித்திருந்தார். ஆண், பெண் இருபாலருக்கும் இது குறித்து பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். ஆனால் இந்த திட்டத்தில் எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்று அவர் தெரிவிக்கவில்லை.