டெல்லியில் முகாம் இட்டுள்ள தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் பிரதமர் மோடியை இன்று சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
மக்களவை தேர்தல் நெருங்க நெருங்க தேசிய அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. 3வது அணி அமைக்கும் முயற்சியில் உள்ள தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், இன்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி மற்றும் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் சந்திரசேகர் ராவ் முகாமிட்டுள்ளார்.
Read Also -> இன்றைய கூகுள் டூடுளில் பாபா ஆம்தே: யார் இவர்?
முன்னதாக ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர் ராவ் பேசியுள்ளார். தெலங்கானா முதல்வரின் இம்முயற்சியை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. ஆளும் கட்சியை வீழ்த்த நினைப்பவர்கள் முக்கிய எதிர்க்கட்சிக்கு ஆதரவாக இல்லாமல் 3வது அணிக்கு முயற்சி செய்வதன் நோக்கம் வேறு யாருக்கோ உதவுவதுதான் என காங்கிரஸ் கூறியுள்ளது.
இந்நிலையில் தெலங்கானா தேர்தலில் வெற்றி பெற்று 2ஆவது முறையாக முதல்வரான பின் சந்திரசேகர் ராவ் பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளார். தெலங்கானா வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து இச்சந்திப்பு இருக்கும் எனத் தெரிகிறது. பிரதமரை சந்தித்த பின் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோரையும் சந்திரசேகர் ராவ் சந்திப்பார் என தெலங்கானா முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.