இந்தியா

மீண்டும் டாடா தலைவரான சந்திரசேகரன் முன் நிற்கும் சவால் இதுதான்!

webteam

டாடா குழும நிறுவனங்களின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மீண்டும் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். வரும் 20-ம் தேதி இவரது பதவிகால முடிவடைய இருக்கும் சூழலில் மீண்டும் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

ரத்தன் டாடாவுக்கு பிறகு டாடா சன்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரர் சைரஸ் மிஸ்திரி நியமனம் செய்யப்பட்டார். ஆனால் டாடா குழுமத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2016-ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டார்.

அப்போது (2016) டாடா குழுமத்தின் முக்கியமான நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக என்.சந்திரசேகரன் இருந்தார். அனைவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப டாடா சன்ஸ் தலைவராக 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் நியமனம் செய்யப்பட்டார். இவர் மீண்டும் மறு நியமனம் செய்யப்படுவார் என்றே அனைவரும் எதிர்பார்த்த நிலையில் டாடா சன்ஸ் இயக்குநர் குழு நேற்று (பிப் 11) கூடி மறு நியமனத்தை உறுதி செய்திருக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவும் இருந்தார். இயக்குநர் குழு ( வேணு ஸ்ரீனிவாசன், அஜய் பிரமல், பாஸ்கர் பட்) உறுப்பினர்கள் ஒருமனதாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிறந்த சந்திரசேகரன் 1987-ம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனத்தில் இணைந்தார். 2007-ம் ஆண்டு செயல் இயக்குநராக உயர்ந்தார். 2009-ம் ஆண்டு தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்ட அடுத்த நாளே (அக் 25 -2016) டாடா சன்ஸ் இயக்குநர் குழுவில் சந்திரசேகரன் இணைந்தார். அடுத்த சில மாதங்களில் டாடா சன்ஸ் தலைவராக உயர்ந்தார்.

செயல்பாடு

கடந்த ஐந்தாண்டுகளில் டாடா சன்ஸ் செயல்பாடு திருப்திகரமாக இருக்கிறது என்பதே அனைத்து தரப்பின் எண்ணமாகும். புஸான் ஸ்டீல் நிறுவனத்தை வாங்கியது, ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் டாடா வசம் கொண்டுவந்தது, டாடா மோட்டார்ஸ் புதிய மாடல்களை கொண்டுவந்தது, ஆட்டோமொபைல் சந்தையை விரிவுபடுத்தியது மற்றும் இ-வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது, பிக்பாஸ்கட், 1எம்ஜி உள்ளிட்ட இ-காமர்ஸ் நிறுவனங்களை வாங்கியது மற்றும் சூப்பர் ஆப் திட்டங்களை தொடங்கி இருப்பது ஆகியவை டாடா குழுமத்தின் கடந்த ஐந்தாண்டுகளில் நடந்த மாற்றமாகும்.

மேலும் டாடா குழுமத்தில் நூற்றுக்கும் மேலான நிறுவனங்கள் இருந்தாலும் 28 பட்டியலிட்ட நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடந்த ஐந்தாண்டுகளில் 192 சதவீதம் உயர்ந்திருக்கிறது. குறிப்பாக டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2017-ம் ஆண்டு ரூ.8 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் தற்போது ரூ.13 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்திருக்கிறது. டைட்டன், டாடா ஸ்டீல், டாடா எலெக்ஸி உள்ளிட்ட பல நிறுவனங்கள் கடந்த ஐந்தாண்டுகளில் நல்ல ஏற்றம் அடைந்திருக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளின் குழுமத்தின் சந்தை மதிப்பு ரூ.15 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

சவால்?

தற்போதைய மறு நியமனத்தில் எந்தவிதமான ஆச்சர்யமும் இல்லை. ஆனால் சந்திரசேகரனுக்கு சவால் காத்திருக்கிறது. ஏர் இந்தியா டாடா குழுமம் வசம் வந்திருக்கிறது. ஏற்கெனவே விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியா ஆகிய இரு விமான நிறுவனங்கள் டாடா குழுமத்தில் உள்ளன. தற்போது ஏர் இந்தியாவும் இணைந்திருப்பதால் மூன்று நிறுவனங்களும் எப்படி செயல்பட போகின்றன என்பதை கார்ப்பரேட் உலகம் கவனித்துவருகிறது.

அதேபோல சூப்பர் ஆப்-க்கான பணிகள் கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலே நடந்தவருகின்றன. ஆனால் இன்னமும் அதற்கான பணிகள் முடிவடையவில்லை. டாடா குழுமத்தின் அனைத்து பொருட்கள் / சேவைகளையும் ஒரே இடத்தில் வாங்குவதற்காக சூப்பர் ஆப் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதனை வெற்றி அடைய வைப்பதும் முக்கியமானதாகும்.

டாடா குழுமத்தில் இருந்து அடுத்தடுத்த மாதங்களில் பல அறிவிப்புகள் வெளியாக கூடும்.