இந்தியா

`தேசியக் கட்சியை விரைவில் தொடங்க உள்ளேன்‘- தெலங்கானா முதலமைச்சர் தகவல்

நிவேதா ஜெகராஜா

தேசியக் கட்சியை விரைவில் தொடங்க இருப்பதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக வலிமையான கூட்டணியை உருவாக்க, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தலைவரும், தெலங்கானா முதலமைச்சருமாக சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரையும் இவர் சந்தித்துப் பேசியிருந்தார். இதேபோல் கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான குமாரசாமியையும் சந்திரசேகர் ராவ் நேற்று சந்தித்து ஆலோசித்தார்.

இந்த நிலையில், சந்திரசேகர் ராவ் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தேசிய செயல் திட்டங்களுடன் கூடிய தேசியக் கட்சியை தொடங்க ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பொருளாதார வல்லுநர்கள், பல்வேறு துறைகளின் நிபுணர்கள் உள்ளிட்ட பலரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத் ராஷ்ட்ரிய சமித், உஜ்வல் பாரத் கட்சி, நயா பாரத் கட்சி போன்ற சில பெயர்கள், புதிய கட்சிக்காக விவாதிக்கப்பட்டுள்ளன. குஜராத், கர்நாடகா மாநிலங்களில் வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் தனது புதிய கட்சியை போட்டியிட வைக்க சந்திரசேகர் ராவ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.