தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர பிரதேச முதலமைச்சரான சந்திரபாபு நாயுடு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மற்றும் முன்னாள் பிரதமர் தேவ கவுடாவை சந்தித்து பேசினார்.
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரவில்லை எனக் கூறி பாஜக கூட்டணியை விட்டு வெளியேறினார் சந்திராபாபு நாயுடு. இதையடுத்து அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சி கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக கடந்த 1 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பாஜகவை வீழ்த்துவதே குறிக்கோள் எனவும் நாட்டை மீட்டெடுக்க வேண்டிய நேரம் இது எனவும் குறிப்பிட்டார்.
எனவே பாஜகவை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் எனவும் தெரிவித்தார். இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று சந்திரபாபு நாயுடு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மற்றும் முன்னாள் பிரதமர் தேவ கவுடாவை சந்தித்துப் பேசினார்.
அப்போது 2019 பொதுத்தேர்தலில் எதிர்கட்சிகள் ஓரணியாய் இணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என ஆலோசனை செய்யப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, இந்தியாவில் அனைத்து துறைகளும் அழிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு கொடுக்கும் அழுத்தத்தினால் ஆர்.பி.ஐ ஆளுநர் உர்ஜித் பட்டேல் பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து பேசிய தேவகவுடா, பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஜனநாயக முறையில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களை கவிழ்ப்பதாகவும் பாஜகவை தோற்கடிக்க ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.