இந்தியா

பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காக முதலமைச்சருக்கே அபராதம்!.. எந்த மாநிலத்தில் தெரியுமா?

webteam

பொது இடத்தில் குப்பை கொட்டியதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதலமைச்சர் வீட்டிற்கு மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. முதலமைச்சர் பகவத் மானுக்கு சொந்தமான வீட்டிலிருந்து கடந்த ஓராண்டாகவே அதிகளவில் குப்பைகள் போடப்பட்டதாக சண்டிகர் மாநகராட்சியைச் சேர்ந்த பாஜக கவுன்சிலர் மகேஷிந்தர் சிங் சித்து குற்றம் சாட்டியுள்ளார். பலமுறை எச்சரிக்கை விடுத்தும் கேட்காததாலேயே இம்முறை மாநகராட்சி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

“ஒரு வருடத்திற்கும் மேலாக அவரது வீட்டில் இந்த குப்பை கொட்டும் பிரச்னை இருந்து வருகிறது. பொதுவாக முதல்வர் உள்ளே இருக்கும் போது, 250 முதல் 300 பேர் கூட அவரது வீட்டில் இருப்பார்கள். வீட்டு மற்றும் சமையலறைக் கழிவுகள் மற்றும் தோட்டக்கலைக் கழிவுகள் உள்ளிட்ட ஏராளமான குப்பைகள், அவ்வீட்டின் இருபுறமும் வீசப்படுகின்றன. முதல்வர் இல்லத்தில் உள்ள ஊழியர்களிடமும், வீட்டிற்கு வெளியே கழிவுகளை கொட்ட வேண்டாம் என பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்தும் அது நிற்கவில்லை” என்றார் சித்து. பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காக முதலமைச்சர் வீட்டிற்கே அபராதம் விதிக்கப்பட்டது பஞ்சாபில் பேசுபொருளாகியுள்ளது.