இந்தியா

தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளதால் இந்த மாநிலங்களிலெல்லாம் மழைக்கு வாய்ப்பு!

நிவேதா ஜெகராஜா

ஜூன் 15ம் தேதி முதல் வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளதால் டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் பருவ மழைக்கான எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை காற்று வீசி வரும் நிலையில் பகல் நேரங்களில் அதிகபட்ச வெப்பநிலை 115 டிகிரிக்கும் மேலாக பதிவாகி வருகிறது. இந்நிலையில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு படிப்படியாக வெப்பம் ஓரளவு குறையும். இந்த வார இறுதியில் டெல்லியில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல ஜூன் 10ம் தேதி முதல் ஹரியானா, பஞ்சாப், வடக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரபிரதேசத்தில் பருவமழைக்கான சூழல் தொடங்க உள்ளது. ஜூன் 15ம் தேதி இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் பருவமழை தொடங்க உள்ளது, இதனால் காற்றின் ஈரப்பதம் அதிகரித்து வடமேற்கு இந்தியாவில் தீவிர பருவ மழைக்கான சாதகமான சூழல் தொடங்கும் என கணிக்கப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை டெல்லியில் ஜூன் 27-28 தேதிக்கு முன்னதாக தொடங்குவது என்றும், அதற்குப் பிறகு தென்மேற்கு பருவமழை காண சாத்தியமான சூழல் டெல்லியில் நிலவும் எனவும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் பட்சத்தில் டெல்லியில் வெப்பம் படிப்படியாக குறைந்து இதமான சூழல் நிலவும் எனவும் வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.