இந்தியா

"சலோ விஜயவாடா" - ஆந்திராவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பேரணி

Veeramani

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அரசு ஊழியர்கள் பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி அரசு பதவியேற்று மூன்று ஆண்டுகள் ஆகியும், ஊதிய உயர்வு, புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து ஆகிய கோரிக்கைளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. இதையடுத்து 13க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் கடந்த வாரம் போராட்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தன. கொரோனா கட்டுப்பாடாக பேரணி மற்றும் போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.

இந்நிலையில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், நேற்று இரவில் இருந்தே தடையை மீறி விஜயவாடாவை நோக்கி படையெடுத்தனர். ஆந்திர அரசுக்கு எதிரான இந்த பேரணியில், பழைய ஊதிய விகிதங்களின்படி ஊதியம் வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் வலியுறுத்தினர்.

"சலோ விஜயவாடா" போராட்டத்துக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர், பல்வேறு மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தொழிற்சங்க தலைவர்களை கைது செய்து வீட்டுக் காவலில் அடைத்தனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.