டெல்லியில் செயின் பறிப்பில் ஈடுபட்டவரை துணிச்சலுடன் பிடித்து வெளுத்து வாங்கிய இருபெண்கள், தங்களது நகையை மீட்டனர். இதுகுறித்த பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
டெல்லியின் நங்லோய் என்ற இடத்தில் பெண்கள் இரண்டு பேர் சைக்கிள் ரிக்ஷாவில் இருந்து இறங்கி சாலையை கடக்க முயன்றனர். அப்போது, அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த இரண்டு பேர் அவர்கள் அருகில் வந்து நின்றனர். பின்னர் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த ஒருவர், திடீரென பெண்ணின் கழுத்தில் இருந்த நகையை பறித்தார். இதைத் தொடர்ந்து இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தபோது அவர்கள் தடுமாறினர்.
அப்போது சிறிதும் பயம் ஏதுமின்றி செயினை பறித்தவரை பிடித்து அந்தப் பெண்கள் கீழே தள்ளிவிட்டனர். இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்தவர் தப்பிச் சென்றுவிட, செயினை பறித்த நபர் சிக்கினார். அவரை சரிமாரியாக பொதுமக்கள் நையப் புடைத்தனர். இதைப் பார்த்ததும் அருகில் இருந்தவர்களும் ஒன்று சேர்ந்து அந்த நபரை அடித்து உதைத்தனர்.
இதையடுத்து, செயினை வாங்கிக் கொண்ட பொதுமக்கள் , சிக்கிய நபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை பெண்கள் துணிச்சலுடன் பிடித்து தங்கள் நகையை மீட்ட சிசிடிவி காட்சிகள் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அவர்களுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.